தென் துருவமான அண்டார்க்டிக்காவிலிருந்து நான் கொண்டுவந்திருந்த கற் பாறைகளில் ஒன்றை பெங்களூரில் உருவாகிவரும் தேசிய
இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்க உதவ வேண்டும் என்ற கோட்பாட்டினை கேட்டபோது நான் சற்று யோசித்தேன் .
சுமார் 50 கோடி வருடங்களாக என்றுமே உருகாத சுமார் 5000மீ கணபரிமான உறைபனிக்கிடையில் கிடந்த ஒரு டன் எடையுள்ள கற்பாறைகள் நாலைந்து நான் தமிழகம்
கொண்டுவந்து " அகத்தூண்டுதல் பூங்கா " அமைத்துள்ளது பொதுமக்கள் அறிவார்கள்.
அவைகளில் சற்று குறைவான எடையுள்ள ஒரு பாறையை உலக உருண்டைபோல் வடிவமைத்து எனது வீட்டின் வரவேற்பு அறையில் சென்ற 26 வருடங்களாக வைத்திருந்தேன்.
அருங்காட்சியகத்திற்குக் கொடுக்க அதுவே சிறந்தது என்று முடிவெடுத்து எனது சம்மதத்தைத் தெறிவித்தேன்.
இந்த உலக உருண்டை எனது இராணுவ வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் . 1971 இந்திய -பாகிஸ்தானிய போரில் கிழக்குப் பாகிஸ்தான்
பங்களாதேஷ் என்னும் புதிய நாட்டை உருவாக்கும் போர்க்களத்தில் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
மின்னல் வேகத்தில் நடைபெற்ற அந்த போரில் பொறியாளர்களான எங்கள் படைப்பிரிவுக்கு ஒரு வித்தியாசமான கட்டளை கிடைத்தது.
பெரும் பாலங்களையும் மிதவைகளையும் விரைவாகக் கட்டும் நாங்கள் ஒரு பெரும் மிதவையைக் கட்டி அதில் பீரங்கிப் படைப்பிரிவினரின் துணையுடன் 130mm கனரக பீரங்கி ஒன்றை ஏற்றினோம் .
கிழக்கு பாகிஸ்தானில் படகு/கப்பல் போக்குவரத்து மிக அதிகம். அப்படிப்பட்ட ஒரு சிறிய கப்பல் எங்கள் மிதவையை இழுத்துக்கொண்டு"மேகனா"என்ற பிரம்மபுத்திராவின்
உப நதிகளில் ஒன்றின் வழியாக டாக்காவிற்கு சுமார் 20-25கி.மீ தூரத்தில் உள்ள "'நரசிங்கிடி " என்ற கிராமம் வரை சென்றோம் .
அங்கு 130mm கனரக பீரங்கி இறக்கி புதைக்கப்பட்டு அங்கிருந்து முதல் பீரங்கிக் குண்டு தக்கவை நோக்கி வீசப்பட்டது. இந்த பீரங்கி சுமார் 30.கி.மீ தூரம்
வரை குண்டு வீசக்கூடியது. முதல் குண்டு டாக்கா விமான நிலையத்தில் வீழ்ந்தது. பாகிஸ்தானிய இராணுவத்தலைவர் Lt.Gen.A,A.K.Niyazi போர் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டதை
உணர்ந்து கொண்டு சரணாகதியடைய ஒப்புட்டுக்கொண்டார்.
மறக்கமுடியாத இந்த அனுபவங்களின் அடையாளமாக நான் வழங்கப்போகும் உலக உருண்டை 130mm கனரக பீரங்கியின் வெடி மருந்துக்கலத்தின் மீது பொறுத்தப்படவேண்டும் என்று விரும்பினேன். பெங்களூர் அதிகாரிகள் எனது உணர்வைப் புரிந்து கொண்டு அப்படியே வடிவமைத்து எனக்குத் தெரிவித்தார்கள்.
இந்த உலக உருண்டையை பொருத்தமான நேரத்தில் பெங்களூர் "தேசிய இராணுவ அருங்காட்சியகத்திற்கு"வழங்கவேண்டும்.இந்த வேலைகள் முடியும்போது நவம்பர் மாதமாகிவிட்டது.
ஆண்டுதோறும் டிசம்பர் 16ல் 1971 போரின் வெற்றி நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினமே சிறந்தது என்று முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி நானும் எனது துணைவியும் பெங்களூர் சென்று கர்நாடகா மாநில முதலமைச்சர் சீதாராமையா முன்னிலையில் இந்த உலக உருண்டை வழங்கப்பட்டது.
பல தெலுங்கு கன்னட செய்திதாள்களில் இந்த செய்தி மறுநாள் வெளியாகியது.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968