` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 8 ஜனவரி, 2018

உருவமற்ற குரல்..........5

அம்பாலாவில் தனித்து விடப்பட்ட கணேசன் லாரிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மூன்று டோசர்களையும் ஒரு மண்மேட்டின் வழியாக கீழே இறக்கி டோசர்களையும் மோட்டார் கிரேடாரையும் அம்பாலா ரயில்வே ஸ்டேஷன் கொண்டுவந்தார். போர் ஆரம்பமாகி விட்டதால் இராணுவ அமைப்புகள் அங்கும் இங்குமாகப் பறந்துகொண்டிருந்தார்கள். வழியில் வந்த ஒரு அமைப்பிடமிருந்து வண்டிகளை ரயிலில் அனுப்புவதற்கான பத்திரங்களை வாங்கி வண்டிகளை ரயிலில் புக் செய்துவிட்டு தனது வண்டியில் பதான்கோட் நோக்கி புறப்பட்டார். வழியில் கிடைத்ததை வாங்கி சாப்பிட்டார்.
அவர் பதான்கோட் வந்தது 05 செப்டம்பர் 1965. காலை சுமார் 10 மணி. வாசகர்கள் அன்றைய செய்தியை நினைவுகூறலாம். போர் ஆரம்பித்த ஐந்தாவது நாள். இந்த நேரத்தில் பாக்கிஸ்த்தானின் விமானப்படையின் செபர் ஜெட் விமானங்கள் பதான்கோட் விமானதளத்தை அங்குலம் அங்குலமாகத் துளைத்துக்கொண்டிருந்தார்கள்.
எங்கு பார்த்தாலும் கூக்குரல் ....எரிந்துகொண்டிருக்கும் இராணுவ வண்டிகள்... அடிபட்டுக்கிடக்கும் இராணுவத்தினர்.இந்த பயங்கர சூழ்நிலைக்குள் நுழைந்த கணேசன் வண்டியை நிறுத்திவிட்டு பதுங்குகுழி தேடி இங்கும் அங்குமாக ஓடுகிறார். எங்கோ வெடித்துச்சிதறிய ஒரு இரும்புத்துண்டு கணேசனின் காலின் பாதப்பகுதில் தாக்க அவர் அங்கேயே சுருண்டு விழுகிறார்.
விமானப்படை தாக்குதல் வெகுநேரம் நீடிக்க முடியாது.நமது Anti aircraft Guns அவர்களைத்தாக்க ஆரம்பித்துவிட்டது. ஓரிரு விமானங்கள் வீழ்த்தப்பட அவர்கள் ஓடிவிட்டர்கள். வீழ்ந்துகிடந்த கணேசன் எழுந்திருக்க முயற்சித்தார். வலது காலின் பாதத்தில் பயங்கர வலி. மிலிட்டரி பூட்ஸ்களை அவிழ்த்துப்பார்த்தார். கட்டைவிரலுக்கு சற்று மேலிருந்து குபீரென்று இரத்தம் பீறிட்டது. வண்டியிலிருந்து பழைய துணியினால் கட்டுபோட்டுக்கொண்டு ஒரு காலில் பூட்ஸ்ம் மற்றோரு காலில் துணிக்கட்டுமாக வண்டியிலேறி தனது படைப்பிரிவைத்தேடினார்.
போரின் தாக்கத்திற்கேற்ப அடிக்கடி உத்திரவுகள் மாறிக்கொண்டிருந்தன. அதிர்ஷ் ட்ட வசமாக அவரது படைப்பிரிவைக் கண்டுபிடித்தார். அதற்குள் அவர்கள் ஜம்முவிற்கு அருகில் கத்துவா என்ற இடத்திற்குச்செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
தலைவரிடம் காலில் அடிபட்டதைக்காட்டினார். அவர் உடனடியாக பதான்கோட் இராணுவ மருத்துவமனைக்கு போகும்படி சொன்னார். மருத்துவ மனை விமான தளத்திற்கு அடுத்த இடம். அன்றைய தாக்குதலில் விமான தளம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவ மனையில் ஒரே கூட்டம்.
அங்கு சென்ற கணேசனுக்கு உடனே எக்ஸ்ரே எடுத்தார்கள். காலில் கட்டைவிரலுக்கு மேலே எலும்பு முறிவு என்று சொல்லி பெரிய மாவு கட்டு போட்டு மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்கள். காத்திருந்த டிரைவரிடம் செய்தியைச்சொல்லி போகச்சொல்லிவிட்டு மருத்துவமனை கட்டிலில் படுத்தார்.
போட்டிருக்கும் பேண்ட் சட்டை தவிர பாக்கெட்டில் ஐடென்டிட்டி கார்ட் மட்டும்தான் அவரிடம் இருந்தது.
மருத்துவ மனைக்கு போரில் அடிபட்டவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். குண்டடி பட்டவர்கள்,கண்ணிவெடியில் சிக்கியவர்கள்,பீரங்கி தாக்குதலில் புதையுண்டு கண்பார்வை இழந்து, காது ஜவ்வு கிழிந்த நிலை என்று விதம் விதமான காயங்கள்.
மருத்துவமனைக்கு வராமலேயே மண்ணோடு மண்ணான வர்கள்
எத்தனை பேரோ யார் அறிவார்கள்.
பெரிய காயங்கள் ஏதுமின்றி காலில் கட்டுடன் கணேசன் அங்குமிங்கும் சென்று அடிபட்டவர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.இடை இடையே பீரங்கி வெடி சப்தமும் விமானங்கள் குண்டு வீசும் சப்தமும் வந்துகொண்டே இருந்தன.

09 செப்டம்பர் 65 அன்று இரவு பாகிஸ்தானின் பாராசூட் படைப்பிரிவினர் இந்திய எல்லைக்குள் இறக்கிவிடப்பட அவர்கள் போரிடுவதற்குப்பதில் தங்கள் பூர்வீக உறவுகள் தேடிப்போய்விட்டார்கள். போரிட்ட பலரும் பிடிபட்டார்கள் .

கைகள் பின்னால் கட்டப்பட்டு கண்களும் கருப்புத்துணியால் கட்டப்பட்ட காயம் பட்ட பலூச் ரெஜிமெண்ட்டைச்சேர்ந்த பாகிஸ்தானியர்களை முதலுதவிக்காக மருத்துவமனை கொண்டுவந்தார்கள்.
இவைகளையெல்லம் பார்த்துக்கொண்டு பண்டைய போர்க்களங்களை நினைத்துக்கொண்டு கணேசன் நாட்களை செலவிட்டார். 09 செப்டம்பர் இரவு பாராசூட் படைப்பிரிவினரை இறக்கியதுடன் பதான்கோட் விமானத்தளம் கடும் தாக்குதலுக்குள்ளானது.
இதனால் மருத்துவமனையை கூடியவரை அவசர சிகிச்சைக்கு மட்டும் வைத்துக்கொண்டு ரயில் பயணத்தைக் தாங்கக்கூடியவர்களை உடனடியாக டெல்லி மருத்துவமனைக்கு மாற்ற உத்திர விடப்பட்டது.
10 செப்டம்பர் இரவு எந்தவிதமான வெளிச்சமும் இல்லாமல் ஒரு மிலிட்டரி காயம்பட்டவர்கள் ரயில் (Military Casuality Train)பதா ன்கோட்டிலிருந்து புறப்பட்டது.
Casuality Train ல் கணேசன்........கையில் காலணா காசு இல்லை. மாற்று உடை இல்லை. டூத் பேஸ்ட் பிரஷ் இல்லை.உற்றம் சுற்றம் உறவுகள் என்ன ஆனார்களோ. இராணுவம் என்ற அடையாளம் தவிர முகவரி களற்ற கணேசன் பயணித்துக்கொண்டிருந்தார் காலில் கட்டுடன்.........
போர் நடந்துகொண்டிருக்கிறது.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968