இந்திய எல்லைப்புறங்களை போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த நேரம் .....
மாநிலத்தின் கிழக்கு பாகிஸ்தானிய எல்லைப்புறத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு......
காலை 11.00 மணி.
"கேப்டன் கணேசன்" சார், உங்களைக் காமாண்டிங் ஆபீசர் அழைக்கிறார்.
விறைப்பாக சலுயூட் செய்த இராணுவ சிப்பாய் செய்தி தெரிவித்துவிட்டு போகிறார்.
சென்ற இரண்டு நாட்களாக இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தில் போர் நடந்துகொண்டிருக்கிறது. கிழக்கு பாகிஸ்தானின் அகதிகள்
பிரச்சினைதான் காரணம்.அதனால் கிழக்குப் பாகிஸ்தானின் எல்லைகள் நான்குபுறமும் இந்திய இராணுவம் சூழ்ந்துகொண்டுள்ளது.
வங்கக்கடலில்இந்தியக்கடற்படையும், கல்கத்தா, சிலிகுரி, பீகார், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா என கிழக்குப் பாகிஸ்தானின் நான்கு
புறமும் இந்திய இராணுவம் சூழ்ந்துகொண்டு மூன்று பக்கமாக பாகிஸ்தானுக்குள் நுழையவும் கடற்படை அவர்கள் தப்பி ஓடாமல் தடுக்கவும்
போர் தீவிரமடைய ஆரபித்திருந்த நேரம்.
இராணுவப் பொறியியல் கல்லூரியில் B.Tech (பட்டதாரிகளுக்கு-3 வருடப் படிப்பு )படித்துக்கொண்டிருந்த கணேசனும் மற்றவர்களும்
கல்லூரி உடனடியாக நிறுத்தப்பட்டு எல்லைப்புறம் அனுப்பப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கணேசன் தனது படைப்பிரிவு
கண்டுபிடித்து திரிபுரா எல்லைப்புறம் வந்து சேர்ந்திருந்தார்.
C O என்று பொதுவாக அழைக்கப்படும் (COMMANDING OFFICER) அதிகாரி ஏன் தன்னை அழைக்கிறார் என்று குழப்பமடைந்த கணேசன்
உடனடியாக சென்று அவர் முன் விறைப்பாக சலூட் அடித்துவிட்டு நின்றார்.
"கணேசன், போர் ஆரம்பித்து இரண்டு நாட்களாகிவிட்டன. கிழக்குப்பாகிஸ்தானின் மூன்று புறங்களிலிருந்தும் பல இடங்களில் போர்முனை
துவக்கப்பட்டுள்ளது. நமது உயர் அதிகாரி நமது படைப்பிரிவு முன் செல்லவேண்டும் என்று துரிதப்படுத்துகிறார்.
இன்று அல்லது நாளை "பங்களாதேஷ்"என்ற புதிய நாட்டை இந்தியா அங்கீகரித்துவிடும். இன்று இரவு ஜீப் இழுத்து போகக்கூடிய சிறிய
பீரங்கிகளான 25 Pounder பீரங்கிகளின் துணையுடன் ஒரு பெரிய தாக்குதல் நடத்தி கிழக்கு பாகிஸ்தானின் கொமில்லா நகரத்தைக்
கைப்பற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லை இடமான "பூரிச்சங்கி"லிலிருந்து கோமதி ஆறுவரை நிறைய ஒற்றைஅடிப் பாதைகள் செல்கின்றன. நீ உடனே புறப்பட்டு போய் இந்த
ஒற்றைஅடிப் பாதையில் ஜீப் போகமுடியுமா என்று பார்த்துவரவேண்டும் என்கிறார்.
Right sir,என்று சலூட் அடித்துவிட்டு கணேசன் வெளியில் வந்தார்.
sten carbine என்று சொல்லக்கூடிய 28 குண்டுகள் நிரம்பிய அந்த துப்பாக்கியையும் உபரியாக 28 குண்டுகள் உள்ள பாக்கெட் ஒன்றையும்
எடுத்துக்கொண்டு பேப்பர்,பேனா,அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஆபிசில் சொல்லிவிட்டு தனக்குரிய ஜீப்பில் புறப்பட்டார்.
போர் ஆரம்பித்து நமது படைப்பிரிவுகள் முன்னேற ஆரம்பித்துவிட்டதால் பல இடங்களில் அவரது பொறியாளர் படைப்பிரிவினர் சாலைகள்
பராமரிப்பு, குடிநீர் வழங்குதல், கண்ணிவெடிகள் அகற்றுதல் போன்றவேளைகளில் இருந்தனர்.
போர்க்களங்களில் உறங்கும் நேரம் என்று தனியாகக் கிடையாது. 24 மணி நேரமும் போர் என்பதால் சில நேரங்களில் சிலஇடங்களில்
ஓய்வெடுத்துக்கொள்வார்கள்.
கிழக்குப்பாகிஸ்தானில் 4-5 கி.மீ. ஜீப்பில் சென்றவர் அதற்குமேல் போகமுடியாது என்ற நிலை வந்த போது டிரைவரிடம் அங்கேயே மற்ற படைப் பிரிவினருடன் இருக்கும்படி
சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
சுமார் ஒரு கி.மீ.சென்றபோது அவரது படைப்பிரிவின் மற்றோர் உயர் அதிகாரி கணேசனைத் தடுத்து நிறுத்தினார். பாகிஸ்தானிய வீரர்கள் சற்று
தூரத்திலிருப்பதாகவும் காலாட்படையின் போர் நடந்துகொண்டிருப்பதாகவும் மேலே சென்றால் ஒன்று மரணம் அல்லது போர்க்கைதி இரண்டில் ஒன்று நிச்சயம். எதுவேண்டும் உனக்கு என்றார்.
கணேசன் அப்படியே நின்றார். ஒரு புறம் Commaning officer கொடுத்த உத்திரவு, மறுபுறம் எதிரில் உள்ள ஆபத்து.
புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை போன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் விளக்கம் தரும் நூல்களையும் திருவாசகம், திருக்குறள், திருஅருட்பா போன்ற இறை அனுபவ
நூல்களையும் தினமும் புரட்டிப் பார்க்கும் கணேசன் சில நிமிடங்கள் அப்படியே தியானத்தில் நின்றார்.
போர்க்களத்திலே வெற்றியும் தோல்வியும் மரணமும் படுகாயங்களும் போரின் விளைவுகள். விளைச்சல் இல்லாமல் பயிர் செய்யும் விவசாயி
இல்லை கணேசன். வீரத்திற்கும் தன்மான உணர்வுகளுக்கும் பண்டைய தமிழர்களின் போர்க்களங்கள் ஏராளமான உதாரணங்களை முன்
வைக்கிறது. தடூர் மன்னன் அதியமானுக்கும் சேரன் பெருஞ்சேரல் இருபொறைக்கும் நடந்த போரிலே ஒரு காட்சி கணேசன் கண்முன்னே
விரிகிறது.
மானம் பெரிதென சீறிப்பாயும் தகடூர் வீரர்கள் பெரும் படையான சேரனின் வீரர்களை கொன்று குவிக்கிறார்கள். படை முற்றிலும் அழியும்முன்னே
பின்வாங்கிவிடலாம் என்று முன் மொழிகிறான் சேர வீரனொருவன்.
அதற்கு படைத்தலைவன் என்னசொல்லுகிறான் பாருங்கள்.
தற்கொள் பெருவிரல் வேந்த வப்பத் தானவற்கு
ஒற்கத்துதவினா னாகுமாற் - பிற்பிற்
பலர் ஏத்தும் செம்மல் உடைத்தார் பலர் தொழ
வானுறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர்
மேன்மை இழப்பப் பழி வருப செய்பவோ
தாமேயும் போகும் உயிர்க்கு.
என்றாவது ஒருநாள் நிச்சயமாகப் போகப் போகும் இந்த உயிரைக் காப்பாற்ற புறமுதுகிட்டு ஓடும் ஈனச்செயலை செய்வதைவிட முன் சென்று
மடிவதே பெயரும் புகழும் கொடுக்கும்.ஆகவே போரிடுங்கள் என்று கர்ஜிக்கிறான்.
கணேசன் தியானம் கலைந்து சக அதிகாரியின் எச்சரிக்கையைப் புறந்தள்ளி மேல் அதிகாரியின் கட்டளையை நிறைவேற்ற முன்னோக்கி நடக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்த போர் என்றில்லாமல் சென்ற சுமார் 7-8 மாதங்களாக பாகிஸ்தானிய இராணுவத்திற்கும் "முக்தி பேகனி"
என்ற முஜுபுர் ரஹ்மானின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் நடந்த இடைவிடாத சண்டையால் எல்லைப்புற கிராமங்கள் எல்லாம் காலியாகி
இருந்தன.
இந்திய இராணுவம் குண்டுமழை பொழிய ஆரம்பித்து விட்டதால் எல்லைப்புற பாகிஸ்தானிய இராணுவம் பின்வாங்கி பாதுகாப்பான
கண்டோன்மெண்ட் பகுதி நோக்கிப் போக ஆரம்பித்திருந்தனர்.
ஆள் அரவமற்ற பாதையில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்த கணேசன் பல இடங்களில் பாக் இராணுவத்தினர் அமைத்து சற்று
முன் காலி செய்திருந்த பதுங்குக் குழிகளையும் ஓரிரு இடங்களில் புகைந்து கொண்டிருக்கும் அடுப்புகளையும் பார்த்தார். இடிந்து
மோசமான வீடுகள், தெருக்கள் என்று மனதில் கலக்கம் ஏற்படுத்தக் கூடிய சூழ் நிலையாக இருந்தது.
திடீரென்று ஒரு வீட்டினுள்ளிருந்து ஒரு ஆள் ஓடி வந்தான்.கணேசன் சற்றே பாதுகாப்பாக நின்றார்.
"சார்,நீங்கள் இந்திய இராணுவ அதிகாரியா"
ஆம்,
உள்ளே உடனே வாருங்கள். பாக் இராணுவத்தினர் இங்கிருக்கிறார்கள்.
தர தர வென கணேசனை இழுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார். பல மாதங்களாக பாக் இராணுவத்தின் கொடுமைகளைக் கண்ட மக்கள்
இந்திய இராணுவத்திற்கு நிறைய உதவிகள் செய்தார்கள்.
யார் நீங்கள் ,எங்கு வந்தீர்கள்
நான் சில சாலை விபரங்கள் பார்க்க வந்தேன்.
இந்த இராணுவ உடையில் வெளியில் வந்தால் பக் இராணுவத்தினர் கொன்றுவிடுவார்கள். இதை மாற்றுங்கள் என்று ஒரு லுங்கியும் ஒரு
வெள்ளை சட்டையும் கொடுத்தார். கணேசன் உடனடியாக உடையை மாற்றினார். காலனியின் உள்ளே அடையாள அட்டையை வைத்துக்கொண்டார்.
துப்பாக்கியையும் உபரி குண்டுகளையும் எடுத்துக் கொண்டார்.
அதற்குள் அந்த ஆள் ஒரு "முக்தி பேகனி"வீரனையும் ஒரு சைக்கிள் ரிக்ஸாவையும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்திய இராணுவ ஐயா எங்குபோக வேண்டுமோ அங்கெல்லாம் பாத்திரமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்துச் சென்று வா.
கணேசன் ஒரு மாய உலகில் நுழைந்து இரவு 10-11 மணியளவில் தனது கடமை முடிந்து திரும்பி நடந்தார்.சீருடை மாற்றி அந்த ஆள் கொடுத்த
தேநீரைப் பருகிவிட்டு தனது படைப்பிரிவு வந்தடைந்தார்.
உதவி செய்த அந்த ஆள் யார் என்று இன்றுவரை தெரியாது.
அன்று இரவே கொமில்லா(மிகப்பெரிய மைநாமத்தி கண்டோன்மெண்ட் )இந்திய படைப்பிரிவுகளால் சூழப்பட்டது . கணேசனின் படைப்பிரிவு
இரண்டாகப்பிரிந்து கொமில்லா முற்றுகையில் ஒரு பிரிவும் பிராமன்பாரியா என்ற மோகனா நதிக்கரைக்கு மற்றோரு பிரிவும் சென்றார்கள்.
கணேசன் மோகனா நதிக்கரை வந்து சேர்ந்தார்.
டிசம்பர் 16 ,1971 ஆண்டு 93,000 பாகிஸ்தானிய இராணுவத்தினர் இந்தியாவிடம் சரணடைய "பங்களாதேஷ்" என்ற புதிய நாடு உதயமாயிற்று.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968