Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


ஞாயிறு, 24 ஜூலை, 2016

உதிரத்தில் நீராடி....

உதிரத்தில் நீராடி....

மன்னர்கள் காலத்தில் ஒரு மன்னன் தான் முடிசூடியபின் தனது நாட்டின் எல்லைகளை விரிவு படுத்தி தனது பெயரையும் புகழையும் இம் மண்ணில் பதிவு செய்திட முயற்சிப்பது அரச தர்மமாக இருந்திருக்கிறது.
இதனாலேயே போர்க்கள இழப்புகளை ஈடு செய்ய ஒவ்வொரு போருக்கு முன்னும் படை திரட்டல் என்ற படைக்கு ஆள் சேர்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
தமிழ்ப் புலவர்களும் படை வீரர்களையும் போர்க்களங்களையும் நிறையவே பாடியிருக்கிறார்கள்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக்கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காலைக்குக் கடனே

என்ற புறநானூற்று பாடல் அன்றைய இளைஞர்களின் கடமை என்னெ வென்று சொல்லுகிறது. இன்றைய போர்க்களங்கள் வித்தியாசமானவை. எதிரிகள் ஒருவரை ஒருவர் போர்முனையில் சந்திக்காமலேயே போரின் முடிவு நிச்சயிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
பண்டைக்காலங்களில் போர்வீரர்கள் உதிரத்தில் நீராடி தங்களுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்கள் என்பதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

வரும் பகைவர் படை கண்டு மார் தட்டிக் களம் புகுந்த
மக்களை பெற்றோர் வாழ்க.
மனம் கொண்ட துணைவருக்கு விடை தந்து வேல் தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க.
உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறம் காத்த உள்ளம் வாழ்க.
திடமான தோள்களும் செயல் வீரர் மரபும்
வாழ்க !வாழ்க !!வாழ்க !!!

அந்த காலத்தில் போர்க்கள தர்மமென்றிருந்தது. உதாரணத்திற்கு நிராயுதபாணியை ஆயுதமேந்தியவன் தாக்கக்கூடாது. பெண்கள் குழந்தைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
ஆனால் இன்றைய போர் எப்படி இருக்கிறது.தோற்றோடும் எதிரியை விரட்டிச்சென்று கொல்லவேண்டும் என்று பாடம் நடத்தப்படுகிறது.
1965 ல் நடந்த இந்திய-பாகிஸ்தானிய போர் 14 நாட்கள் மிகத்தீவிரமாக நடந்தது. 1962 ல் நடந்த இந்திய- சீன போரில் மிக மோசமான நிலையை சந்தித்த இந்தியா விழித்தெழுந்து தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட நேரத்தில் இந்திய- பாகிஸ்தான் போர் ஆரம்பமானது. இராணுவம் பெருமளவில் விரிவு படுத்தப்பட்டு ஏராளமான நாட்டுப்பற்றுடைய இளைஞர்களைக்கொண்டு பலம் வாய்ந்த படை ப்பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்த நேரமது.

போர்க்கள சூழ்நிலை உருவானவுடனேயே இந்திய வடமேற்கு பகுதியில் ராஜஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை பல அடுக்குகளில் இந்திய இராணுவம் நின்றது.
பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் போரை ஆரம்பித்திருந்தாலும் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி எங்களுக்கு வசதிப்பட்ட இடத்தில்தான் நாங்கள் போர் தொடங்குவோம் என்று பஞ்சாப் பகுதிகளில் புதிய போர்முனையை உருவாக்க போர் மிகவும் விரிவாக தொடங்கியது.
இந்திய படைப்பிரிவுகள் நாளுக்கு நாள் புதிய இலக்கு நோக்கி நகர்ந்தன. அம்பாலாவிலிருந்து பதான்கோட் நோக்கி வந்துகொண்டிருந்த கணேசனின் படைப்பிரிவு வழியிலேயே இலக்கு மாற்றப்பட்டு பெரோஸ்பூர் செல்ல உத்தரவிடப்பட்டது.முன்னோக்கி பதன்கோட் சென்றுவிட்ட கணேசன் கடுமையான பாகிஸ்தானிய வானூர்தி தாக்குதலில் மாட்டிக்கொண்டார்.
அமெரிக்க sabre jet விமானங்களில் கனரக துப்பாக்கிகள் கீழ் நோக்கிப் பொருத்தப்பட்டு விமானங்கள் குண்டுமழைப் பொழிந்துகொண்டே இந்திய பகுதிகளில் சில வினாடிகள் பறந்து சில நூறுவீரர்களைக் கொன்றுவிட்டுதிரும்பி ஓடிவிடும் straffing எனப்படும் போரில் மாட்டிக்கொண்ட கணேசன் காலில் குண்டடிபட்டு வீழ்ந்துவிட்டார்.
போர்க்களம் ஒரு வித்தியாசமான இடம். பயம், படுகாயங்கள், மரணம் என உடலையும் மனதையும் சிதறடிக்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தாலும் நாட்டுப்பற்றும், சகோதர ஒற்றுமையும் முன்னின்று வழிநடத்த இந்திய படைப்பிரிவுகள் வெற்றிவாகைசூடிய 1965 போர்க்களம் ஒரு மறக்க முடியாத அனுபவம்தான்.
தனது படைப்பு பிரிவைப் பிரிந்து காலில் குண்டடி பட்ட கணேசன் பதான்கோட், டெல்லி . லக்னோ மாற்று சென்னை போன்ற இராணுவ மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டு கால் குணமாகி மீண்டு அவரது படைப் பிரிவைச் சேர்ந்தபோது அவர்கள் பாகிஸ்தானிய பெரு நகரமான சியால்கோட் அருகில் இருந்தார்கள்.

உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடிய கணேசன் பகைவர்கள் நாட்டில் கால் பதித்தார்.
இயற்கை இன்னும் எவ்வளவு அற்புத விளையாட்டுகளை அவருக்காக தேர்வுசெய்து வைத்துள்ளது என்பதை யார் அறிவார்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968