கர்னல் பா .கணேசன் சுமார் பத்து புத்தகங்கள் எழுதியுள்ளார் . மேலே குறிப்பிட்டுள்ளது அவரது நூல்களில்
ஒன்று.
பொதுப்பணித்துறை அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் ஒரு விபத்து போல இராணுவ அதிகாரியானார். அவரது உடலளவிலும்
மனத்தலளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அது எப்படி நிலை நிறுத்தப்பட்டது போன்ற அனுபவங்கள் நிறைந்தது அந்த நூல்.
அந்த நூலுக்கு வாழ்த்துரை இது.
விருப்பு வெறுப்பற்ற ஒரு சாத்தியத்தேடல்
டாக்டர். வெ .ஜீவானந்தம்.B.Sc.M.B.B.S,DA
தலைவர் தமிழக பசுமை இயக்கம்
படிகள் படிப்பியக்கம் .
45.பி.கலைமகள் கல்வி நிலையம் சாலை
ஈரோடு ,638001
கர்னலின் நூலுக்கு வாழ்த்துரை எழுத முனையும்போது எனக்கு சற்றே தயக்கம் ஏற்பட்டது.இராணுவம், போர் வீரம், வெற்றி பற்றியெல்லாம் என் பார்வை சற்றே வேறுபட்டது.
எனவே இராணுவ வீரரின் நூலுக்கு நாம் எப்படி என்ன எழுதுவது என்ற தயக்கத்துடனே தான் படித்தேன். நான் செய்ய நினைத்திருந்த விமரிசனத்தில் பெரும் பகுதியை ஆசிரியரே செய்ததில் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
உலகின் மிகப்பெரிய யுத்த பூமி நம்முள் இருக்கும் குருஷேத்திரமே .அதனால்தான் போரிடு என்று அர்ச்சுனனை ஆற்றுப்படுத்திய பகவத் கீதையை அண்ணல் காந்தி அஹிம்சை நூல் என்கிறார்.
உடமை வெறியும் ஆதிக்க வெறியும் உதிக்கும் ஒவ்வோர் இடத்திலும் போரும் வன்முறையும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன.
எளிய கிராமிய குடும்பத்தில் பிறந்த கணேசன் கர்னலாகிறார்.
ஆனால் அடிநிலை சிப்பாய்களாகச்சேருவோர் நிலையோ பரிதாபம் என்று வருந்துகிறார். தேசபக்தி, தேசபக்தி என்று முழங்கும் அரசியல் தலைவர்களின்
படிக்காதப் பிள்ளைகூட சிப்பாய்யாவதில்லை . வசதியற்ற ஏழைகள் பிழைப்புக்காக தம் உயிரை விலை பேசுவதாகவே அது உள்ளது என்ற உண்மையைக்
காட்டுகிறார்.
இராணுவ வீரனும் மனிதனே. போர் அறிவிக்கப்படும்போது எல்லோருக்கும் உண்டாகும் மனப்போராட்டம் , வேதனை, துயரம் போலவேதான் அவனுக்கும் நேர்கின்றன. வீரம், தேசபக்தி,தியாகம் என்பனவற்றை சாதாரண
மனித உணர்வுகள் வெல்லும் உண்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வரலாற்றில் சில கடிதங்கள் மறக்கமுடியாத இலக்கியமாகிவிடுகின்றன. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதம் இன்றைய தலைமுறைக்கும் உலக
வரலாற்றைக் கூறும் இலக்கியமாக்கத்திகழ்கின்றன. கர்னல் கணேசனின் இந்த நூல் பல கடிதங்களின் கோவை. இராணுவ வாழ்க்கையின் பலகூறுகளை இது வெளிப்படுத்துகிறது.
தனிமனிதனின் அனுபவங்கள் சுயத்தை மிஞ்சிக்கடந்து உலகு தழுவிய பார்வை பெறும்போது அவை வலிமைபெறுகின்றன.
அண்மைவரைக்கூட சென்னை நகரத்தின் மையத்தில் லட்சக்கணக்கான மக்களால் தினம் தினம் பார்க்கப்பட்டு , கடந்து செல்லப்பட்ட மத்திய சிறைச்சாலை இருந்தது.
அது இடித்துத் தகர்க்கப்படும் முன் மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. அதை பார்வையிட்டபோது ஒரு பாமரனின் மனம் எப்படியிருக்குமோ அப்படி கர்னலின் இராணுவப்பணி
பற்றிய ஒளிவு மறைவற்ற படப்பிடிப்பைக் கண்டபோது எனக்குத்தோன்றியது.
இராணுவப் பணியைத் தேர்ந்தெடுத்த காலம் தொட்டுப் புதிய பயிற்சிகள் பெற்று , பதவி உயர்வுகள் பெற்று, போர்க்களத்தில் வீர சாகசம் புரிந்து, ஜனாதிபதியின்
விருது பெற்று, ஒவ்வொரு நிலைகளிலும் தன் சிறப்பைத் தான் மட்டுமே கண்டு, உணர்ந்து, மகிழ்ந்தாலும் உடன் பகிர்ந்துகொள்ள உறவுகள் இல்லாத சோகத்தை அனுபவித்தால்
மட்டுமே அறியலாம் .
ஆனால் அந்த சோகத்தை பூனாவில் துவங்கி அண்டார்க்டிக்கா வரை கர்னல் பெற்ற வெற்றி பின் வாங்கச்செய்து
தமிழரைத் தலை நிமிரச் செய்துவிட்டன.
களத்திலே மோதும் போருக்கு முன்பாக நிகழும் பலப் பல முன்னேற்பாடுகளே போரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன.ஆயுதங்களை விட ஆயத்தங்களே முக்கியம்.
கர்னலின் பொறியாளர் பிரிவு செய்துமுடிக்கும் அந்த ஆயத்தங்களும் , ஆக்கமும், அழிவும் தான் நம்மவர் முன்னேறவும் , எதிரிகள் பின்னடையவும் செய்யும் வெற்றியின் வித்துக்கள்.
கர்னலின் இராணுவ அனுபவம் வேறொன்றையும் எடுத்துக்காட்டுகிறது . அதுதான் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் வேகத்தில் ஒரு மொழியை கற்கத்தவறிய , அந்த மொழியை
கற்க விரும்புவோருக்கும் மறுக்கப்பட்ட ஒரு தலைமுறை ஏக இந்தியாவில் எத்தகைய புறக்கணிப்புகளையும்,பின்னடைவையும் பெரும் என்கிற செய்தி.
விழித்துக்கொண்ட கான்வென்ட் தமிழர்கள் பதவி பெற்று வாழ அரசுப்பள்ளிகளில் அடித்தட்டுத் தமிழன் பலிக்கடாக்களாகத் தொடர்வது இனியும் சரியா என்று மௌனமாகச் சிந்திக்கத் தூண்டுகிறார் கணேசன்.
கான்ட்ராக்டர்களின் ஊழல் பிடியில் சிக்கிய பொதுப்பணித்துறையும் போக்கு வரத்துத் துறையும் நாட்டை ஆளும் பிரதமராலேயே கண்டிக்கப் பட்டன.
கணேசன் போல இன்னும் எத்தனைபேர் இந்த ஊழல் முதலைகளுக்கு இரையாக வேண்டுமோ?நேர்மையற்ற தேசபக்தி போலித்தனத்திற்குப் போடும் வேழமே.
நமது நாட்டின் வட கிழக்கு எல்லையிலும் தென்மேற்கு எல்லையிலும் போர்க்களத்தில் நின்ற கர்னலின் அனுபவம் பெரிதும் மாமன்னர் அசோகரின் உணர்வுகளை ஒத்ததாகவே உள்ளது.
கொலையே தேச பக்தி என்றும் வீரமென்றும் நியாயப்ப படுத்துகிறோம்.
மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அநீதிக்காகப் போராடுகிறோம் என்று அறிந்தும் போர்க்களம் செல்லும் கும்பகர்ணர்களின் மன சாட்சியை உறங்கச்செய்யும் போதையே வீரம் என இலக்கியச் சான்று காட்டி கணேசன் வருந்துகிறார்.
மொழியால்,பண்பாட்டால்,வேறுபட்டு மக்களை மதத்தால் மட்டும் ஒன்றுபடுத்த முடியாது என்பதை டாக்கா குதிரைப் பந்தய மைதானத்தில் 93,000 பாகிஸ்தானியர் சரணடைந்த வேளையில்அசோகர் போல கணேசன் உணர்கிறார்.
இதே நிலை இலங்கையிலும் உண்டாகக் கூடும் என்று எச்சரிக்கிறார். இந்த சிந்தனை இந்தியத்தலைவர்களுக்கு இயலாமற்போனது ஏன் ?
மொத்தத்தில் இராணுவம் போர் பற்றியெல்லாம் ஒரு க்வாக்கர் பார்வையுள்ள நான் ஒரு இராணுவ வீரரின் கடிதங்கள் சொல்லும் கதைகளைப் படித்து மன நிறைவு கொண்டேன்.
கரும் பச்சை சீருடையில் நல்ல தமிழ்ச்சொல்லாக்கம் இலக்கிய மேற் கோள்கள் ஆழ்ந்த மன உணர்வுகள் என மொழி உணர்வு சுரக்கிறது .
கண்டத்தைச் சொல்லுகிறேன் -உங்கள்
கதையைச் சொல்லுகிறேன் -இதைக்
காணவும் கண்டு நானவும்
காரணம் உண்டென்றால்
அவமானம் எமக்குண்டோ.?
தூய விருப்பு வெறுப்பற்ற சாத்தியத்தேடலை கர்னல் கணேசன் துவக்கி யுள்ளார். இதில் விஞ்சி நிற்பது அன்பு, பாசம், நேர்மை, மனித நேயம் .
அவற்றை யார் வெல்ல முடியும்?
.வெ .ஜீவானந்தம்.
சுமார் 160 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தாரிணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பிரதிகள் தேவைப்படுவோர் கர்னல் கணேசனை அணுகவும்.
தொ.பெ. 044-26163794
செல் :9444063794.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968