` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


சனி, 16 நவம்பர், 2019

வீழ்வேனென்று நினைத்தாயோ.

எழுபத்தியெட்டாவது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் எனது அனுபவத் தொகுப்பு ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கமுடியாத ஒன்று.இதைப் பதிவு செய்வதும் இதை பெரும்பாலான மனிதர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எனது தலையாயக் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இந்த ஞான வேள்வியில் என்னை அறிந்தவர்கள் வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்காமல் சற்றே வடம் பிடிக்க வேண்டுகிறேன். "ஊர்கூடித் தேரிழுப்போம்" என்பார்கள்.தனி மனிதனாக நான் களைப்படைகிறேன்.ஆனால் வீழ்ந்துவிட மாட்டேன். பாரதியின் பாடல்இதைத்தான் திரும்பத்திரும்ப எனக்கு நினைவூட்டுகிறது. எனது எழுத்தும் செயல்பாடும் தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கிறது.

உற்றமும்சுற்றமும்தாங்கள்,தங்கள்சந்ததியினர்க்கென்று பொன்னும் பொருளும் தேவைக்கு மீறி குவிக்கும் முயற்சியிலிருக்கையில் நான் ஞானத்தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.வெந்து முடிகையில் நான் வைரமா ? அல்லது கரிக்கட்டையா ? என்பது தெரியவரும். இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது என்பது எல்லோரும் அறிந்ததே.தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தல் அதுவும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறப்பது பேரதிர்ஷ்ட்டம்.



அப்படிப்பட்ட சூழ்நிலையில் உடல் ,மன குறைகளின்றி பிறந்து கிராமத்திற்கே உரிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கியதோடு தமிழ்மொழியின் அருமை பெருமைகளையும் சுவைக்கத்தொடங்கியபோது நான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தேன்.

தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பம் மிகஉழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப் பருவம் எய்திக் கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் -பல
வேடிக்கை மனிதர்களைப்போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ ?.



பாரதியின் பாடல் மனதில் ஒலித்துக்கொண்டேயிருக்கயில் நான் பள்ளிப்பருவம் கடக்கிறேன். 1962ல் சீனாவின் கொடியதாக்குதலுக்கு உள்ளான இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி இந்திய இராணுவம் பெருமளவு விரிவுபடுத்தப்பட்டது. பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருந்த என் மனதில் பாரதிதாசனின் இந்த பாடல் சற்றே சலனப்படுத்த ஆரம்பித்தது.



எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமெனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்..

தஞ்சாவூருக்கருகில் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஊரின் மூலைக்கு மூலை நாட்டின் அவசரகால நிலை பற்றிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.



ஐந்து அண்ணன் தம்பிகளுடன் பிறந்திருந்த நான் எங்களில் ஒருவராவது இராணுவத்தில் சேருவது இந்த நாட்டிற்கு செய்யும் நன்றிக்கடன் என்று முடிவு செய்து நானே முன்வந்தேன்.



பயிற்சி காலத்திலேயே Atheletic Blue என்ற சிறப்புத் தகுதியுடன் இந்திய இராணுவத்தில் அதிகாரியானேன்.





குடும்பத்தில் ஒருவனாக எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருந்த நான் இராணுவப் பணி காரணமாக சுக துக்க நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்குகொள்ள முடியவில்லை.பல குடும்ப நிகழ்வுகள் நான் அறியாமலேயே நடந்தேறின.ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும்போதும் அம்மா ஊரின் ஜனன மரண கணக்குகளையும் அண்ணன் தம்பிகள் ஊரின்,உறவின் நடப்புகளையும் சொல்லுவார்கள்.

சுமார் ஐம்பது வயதில் தீவிர காச நோய்க்கு அம்மா ஆளானார்.மூத்தவர்கள் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் ஒன்றிவிட தாயன்பின்றி வளரும் தம்பி தங்கையின் நிலை எனது விடுமுறை நாட்களை சோகமயமாக்கின.இராணுவப் பணியை உயிரினும் மேலாக நேசித்த என் மனதில் அண்ணன் தம்பிகள் அக்காள், தங்கை என்று நான் பின்னியிருந்த பாசவலை சற்றே சிதைவுற ஆரம்பித்தது.

சிறப்பான இராணுவ அதிகாரியாக உருவெடுக்க பாடுபடும் எண்ணில் விடுமுறை நாட்கள் தங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தின.அம்மாவின் கடைசி நாட்களில் எனக்கு விடுமுறை மறுக்கப்பட்டு நான் அவர் பூத உடலைப் பார்க்காமலேயே அவர் மறைந்தார். இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக நான் நிலை தடுமாறிப் போனாலும் பாரதியின் "நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ " என்ற வரிகள் என்னை நிமிர்ந்து நிற்க வைக்கும்.இராணுவக் கல்லூரியில் Civil Engineering பிரிவில் முதல் மாணவராக B.Tech பட்டம் பெற்றேன்.



விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது
விம்முகின்ற குழந்தையினும் மிகப் பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர் கடலில் விழுந்து நெடுங்காலம்
அலைந்து அலைந்து மெலிந்த துரும்பதனின் மிகத்துரும்பேன்

என்ற ராமலிங்க அடிகளின் பாடல் வரிகள் விண்ணிலிருந்து எனக்கு புதிய சக்தியைக்கொடுக்கும். Thought Replacement Technique போன்ற மனப் பயிற்சிகள் என்னை மாற்றிக்கொள்ள உதவின.



மனதின் ஏற்ற இறக்கங்களை எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்தேன்.ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் ஓய்வுக்குப்பிறகே நூல் வடிவம் பெற்றாலும் அவ்வப்பொழுது ஏற்பட்ட மனநிலைக்கு ஒரு வடிகாலாக அமைந்தது எனது தமிழ்.



தனி வாழ்வின் இழப்புகளும் சோகங்களும் இராணுவ வாழ்வின் உயர்வைப் பாதிக்காத முறையில் நான் சீரோடும் சிறப்போடும் பணியாற்றி பெயரோடும் புகழோடும் ஒய்வு பெற்றேன்.





இன்று எனது நூல்கள் ,மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே மனதளவிலே மாற்றத்தைக் கொடுத்து பின்னர் அது செயல் வடிவம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன். எனது எழுத்துக்களை பெரிதும் நேசிக்கும் திரு வையவன் அவர்கள் தனது எண்பது வயது முதுமையிலும் எனது இரண்டு நூல்களை மறு பதிப்பு செய்யும் மகத்தானப் பணியிலிருக்கிறார்.

இந்த நூல்கள் வரும் நவம்பர் 30 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சன்னாநல்லூர் "அகத்தூண்டுதல் பூங்கா "வளாகத்தில் இந்திய இராணுவத்தில் தன்னிகரற்ற தலைவனாகப் பணியாற்றிய உயர் திரு Brigadier M.Sudanthiram,V S M. அவர்களால் வெளியிடப்படவுள்ளது.



அனைவரும் வருக ! அவசியம் வருக.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968