மனிதப்ப பிறவி தாங்கமுடியாத வலியுடன் தான் தொடங்குகிறது.
தக்க தசமதில் தாயோடுதான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
என்ற திருவாசகப்"போற்றி திரு அகவல் " வரிகளை இங்கே நினைவுகூறலாம்.
இன்பமும் துன்பமும், மகிழ்ச்சியும், வருத்தமும் உடலின் உணர்வுகள். உடலின் எந்தப் பகுதியும் வலியை உணரலாம் என்றாலும்
இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சில பகுதிகளில்தான் இறைவன் வைத்திருக்கிறான்.
உடல் வேறு உயிர் வேறு என்பதை நாம் எல்லோரும் அறிவோம். உடல் இன்ப துன்பத்தை உணர்வதில்லை.ஏனெனில் உயிர் போன
பிறகு இருக்கும் உடலுக்கு எந்த உணர்வும் இருப்பதில்லை.உயிர் அல்லது ஆன்மா என்பதற்கும் உணர்வுகள் இல்லை
ஆக உடலுக்கும் உயிருக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று இரண்டையும் இணைத்து ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வைக்கிறது.
உடலும் உயிரும் இணைந்திருந்தாலும் உணர்வு என்ற ஒன்றை தற்காலிகமாக நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை செய்வதை நாம்
அறிவோம். நமது பாதிக்கப்பட்டப் பகுதியை -உதாரணமாகக் கையை மருத்துவர் அறுத்து மருந்திட்டு தையல் போட்டாலும் நாம் வலி ஏதுமின்றி
பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.மருத்துவரின் வேலை முடிந்த சிலமணி நேரத்தில் அந்த இடத்தில் உணர்வுகள் திரும்ப நாம் வலியை
உணர்கிறோம்.
நமதுமனநிலை(மனசாட்சி, conciousness)நான்குநிலைகளில்செயல்படுகிறது. விழிப்பு நிலை, (wakefull)கனவு நிலை, (Dream)ஆழ்நிலை உறக்கம்,
(Deep sleep)மற்றும் புறவெளி நிலை (Transcendental). நமது குணங்களான சத்வ, தமோ, மற்றும் ரஜோ என்பது பற்றி நாம்
அறிவோம்.
இம்மூன்று குணங்களும் உடலின் பஞ்ச பூத (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) உணர்வுகளான சப்த, பரிச, ரூப, ரச, கந்த என்பனவற்றுடன்
இணைச்செயலாற்றுகின்றன, (interact.)
உதாரணமாக சப்தம். இந்த சப்தம் சத்வ குணத்துடன் இணையும்போது ஒரு அற்புதமான இசையாக நமக்கு கேட்கிறது. அதே சப்தம் ரஜோ
குணத்துடன் இணையும்போது நமக்கு கோபமும் வெறியும் உண்டாகிறது.தமோ குணத்துடன் இணையும்போது நாம் வருத்தமும்
சோகமும் அடைகிறோம்.
நமது செயலாக்கம் இந்த பஞ்ச பூதங்களுடன் அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் ஆகியவற்றின் இணைப்பு
அல்லது எதிர்ப்பு என்பதை பொறுத்து மாறுபடுகிறது.இதில் எந்த இணைப்பிலோ, அல்லது எதிர்ப்பிலோ குறைகள் ஏற்படலாம்.
நமது எண்ணம்
நிலம்.
நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
தமோ, ரஜோ, சத்வ
நமது செயல்.
மேலே உள்ளதை மேலிருந்து கீழாக பார்த்தோமானால் நமது எண்ணங்கள் ஏதாவது ஒரு பஞ்ச பூதத்தின் தூண்டுதலில் தோன்றி மற்ற
பூதங்களால் சீரமைக்கப்பட்டு பின்னர் அந்தக்கரணங்களால் பரிசீலிக்கப்பட்டு பின்னர் ஏதாவது ஒரு குணத்தின் வெளிப்பாடாக செயலாகப்
பரிமளிக்கிறது.
ஒரு எண்ணம் செயலாக்கத்திற்கு முன் எத்தனை விதமான இணக்கம் அல்லது எதிர்ப்புகளுக்கு ஆளாகி கடைசியில் செயல்படுத்தப்
படுகின்றன என்று பாருங்கள். மனிதன் தனது செயல் பாராட்டப்படவேண்டும், புகழப்படவேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கிறான். இந்த
எதிர்பார்ப்பு உடலைச்சார்ந்ததா, உயிரைச்சார்ந்ததா என்றால் இரண்டையும் சார்ந்தது அல்ல. இது ஒரு உருவகம். இது உருவகம் என்பதை
புரிந்துகொண்டால் மனிதனின் செயலாக்கம் செயலின் வெற்றிக்காக இருக்குமே அல்லாது அது புகழப்படுமா இல்லை தூற்றப்படுமா என்ற
முடிவில் இருக்காது.இது புளியம் பழம் பழுத்துவிட்ட நிலையில் அதன் ஓடு தன்னால் பழத்தை விட்டு விலகிவிடும் நிலை.
இந்த நிலையை அடையும் மனிதனுக்கு உடலின் இடர்பாடுகள் உணரப்படுவதில்லை.உணர்ந்தாலும் அது செயலில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
உதாரணமாக மனிதனுக்கு தலை வலிக்கிறது. தலை வலி இருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த தலைவலி அவனது
செயலைக் கட்டுப் படுத்துவதில்லை.
நமது மூச்சுப் பயிற்சி,தியானம்,போன்றவை இப்படி நமது உடல், மற்றும் அகங்கார இணைப்புகளிலிருந்து நம்மை விடுவிப்பதாக
இருக்கவேண்டும். அதாவது நம்மிலிருந்து வெளியேறி நம்மை அடையத்துடிக்கும் முயற்சி இது. மேலோட்டமான நமது உணர்வு நிலை
கடந்து ஆழ்மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சி இது. அதாவது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைப்பயணத்தை நமக்குள்ளேயே
நடக்க முயற்சிக்கும் செயல்.இது சிறப்பாக இருந்தால் உங்களது பூர்வ ஜென்ம பிறப்புகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல் உள்ளேயே ஓடும்.
இப்படிப்பட்ட பயிற்சிகளினால் கண்முன்னே தெரியும் இடர்பாடுகள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை.நமது இலக்கு நோக்கி நமது நடை தடைபடுவதில்லை.
pre conceived dicisions will affect the result. ஜாக்கியைத் தேடிவரும் டிரைவர் முடிவாக எதிர்ப்பட்டமனிதரிடம்
"நீ ஜாக்கியைத் தரவேண்டாம் " என்று சொல்வது போலிருக்கும்.(இந்த கதை உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.)
உயிரைக் காப்பாற்ற கைகளை இழக்கவேண்டி வந்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும். அப்பொழுது "கைகளைக் கேட்டேன்,
சிறகுகள் தந்தீர் "என்று அந்த பரம்பொருளுக்கு நன்றி சொல்லுவோம்.
தவம் செய்யும் ஞானப் பண்டிதர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாத ஒன்று. ஏதோ ஒன்று மாபெரும் சக்தியாக இப்பரந்த
உலகை நடத்துகிறது என்ற ஒரு அனுமானம் தவிர அது எது,எப்படி இருக்கும்,ஆணா,பெண்ணாபோன்ற எதுவுமே அவர்களுக்குப்
புலப்படுவதில்லை. ஆனால் நிச்சயமாக ஏதோ ஒன்று நடத்துகிறது என்பதில் மட்டும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இப்படி மன
உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தவம் செய்யும்போது ஒரு நிலையில் அவர்களுக்குள் ஒளிவெள்ளம் பாய்கிறது.அந்த அமானுஷ்ய சக்தி
பரப்பிரம்மம் அவர்கள் கற்பனை செய்திருந்த உருவம் போலவோ அல்லது வேறு விதமாகவோப் பிரகாசிக்கிறது.
கும்பகோணம் என்ற ஊர் போகவிரும்பும் ஒருவன் அந்த ஊருக்கு ஒருபயணச்சீட்டு எடுத்துக்கொண்டு ரயில் அல்லது பேருந்தில்
சென்று அமர்கிறான். அந்த ஊர்தி கும்பகோணம் செல்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறான். வண்டி புறப்பட்டு ஓடுகிறது.
எத்தனையோ ஊர்களைக் கடந்துகொண்டிருக்கிறது. கும்பகோணம் வந்துவிட்டது என்பதை எப்படி அவன் தெரிந்துகொள்வான்.
யாராவது அந்த ஊரைப்பற்றி அறிந்தவர்கள் சொல்லலாம். அல்லது அந்த ஊரைப்பற்றி அவன் படித்த சில அடையாளங்களை நினைவு
வைத்திருக்கலாம். அப்பொழுதுதான் அவன் அந்த ஊரை அடையமுடியும்.
தவறுதலாக கும்பகோணம் செல்ல வேண்டிய அவன் காஞ்சிபுரம் செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டால் காஞ்சிபுரம்
சென்றுவிடுவான், அல்லது மயிலாடுதுறையில் இறங்கி மகாமக குளத்தைத்தேடுவான். அதாவது கும்பகோணம் என்ற ஊருக்கான சில
அடையாளங்களை அவன் தெறிந்திருக்கவேண்டும்
அதுபோல இந்த மாபெரும் பிரபஞ்ச சக்தியை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதைப்பற்றி படித்தோ, பிறர் சொல்லியோ நாம்
உணர்ந்திருக்கவேண்டும்.. அதை வேடிக்கையாகவோ, எதிர்வாதம் புரியும் விதத்திலோ அல்லது இவைகள் எல்லாம் வெறும் கற்பனை
என்று விவாதம் செய்யும் அளவிற்கோ நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த ஞான வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு
கிடைத்தால் ஓ! இதுதானா அது ! "அகம் பிரம்மாஸ்மி" என்று தெரியவரும்
ராம கிருஷ்ணன் என்ற கிழவன் பேலூர் மடத்திலிருந்துகொண்டு ஏதோ உளறிக்கொண்டிருக்கிறாராமே என்ற அகங்காரத்துடன் அவரைக்க
காண வருகிறான் நரேந்திரன் என்ற இளைஞன். ஆனால் ராம கிருஷ்ணரின் பார்வை பட்டதுமே நரேந்திரன் ஒரு மாய சக்தியினால்
ஈர்க்கப்பட்டு எதுவுமே பேசத்தோன்றாமல் மௌனமாகிவிடுகிறான். குருவின் தீட்சை ஒருவிதம் என்றால் " தானே தனக்குத் தலைவிதியாய்"
தோன்றுபவர்களின் சுய சந்நியாசம் வேறுவிதம் என்பதை மேலே சொல்லிய விளக்கங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
பிரபஞ்சத்தின் இயக்கசக்தியை உணர்ந்த மாமனிதர்கள் ஒவொருவரும் தங்களது விளக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அம் மாமனிதர்களிடம் தீட்சை பெற்றவர்கள் அல்லது அந்த ஒளிப்பிழம்பை உணர்ந்த மற்றவர்களும்கூட பல நூல்கள் எழுதியிருக்கிறார்கள்.
மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒரு உலக மகா காவியம் என்று புகழ் பாடுகிறார் G.U.Pope என்ற கிறிஸ்தவ மாமனிதர்.
ராமலிங்க அடிகளின் "திருஅருட்பா"உள்ளத்தை உருக்கக்கூடியது. "ஈராறு ஆண்டுகள் நான் பட்ட பாட்டைக் கேட்டால் இரும்பும் கரையுமே" என்று
பன்னிரண்டு ஆண்டுகள் தனது ஆன்ம தவம் பற்றி சொல்லுகிறார்.
சிவஞானபோதம்" தந்த மெய்கண்டதேவர், "ஆத்ம உபதேச சதகம்" தந்த நாராயணகுரு போன்ற மாமனிதர்களின் உபதேசங்களும் அந்த
பரம்பொருளுக்கு விளக்கம் தருகிறது. நாராயணகுருவின் ஆத்ம உபதேச சதகம் அவரது சீடரான நடராஜ குரு, பின்னர் வந்த நித்ய சைதன்ய
யதி ஆகியோர்களால் விளக்கம் தரப்பட்டுள்ளது. குரு ஒரு வரியில் சொல்லும் ஒரு மந்திரத்தை மாணவன் ஒரு பெரிய நூல் வடிவத்திற்கு
விளக்கி எழுதுகிறான்.
நித்ய சைதன்ய யதி அவரது விளக்க நூலுக்கு கொடுத்துள்ள தலைப்பு,
இதுவுமல்ல ! ,அதுவுமல்ல ! ஓம் !!!
Neither this;nor that but ohm.
ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகள் என்ற நூறு பாடலுக்கு நித்யா அவர்கள் சுமார் 750 பக்கங்களுக்குவிளக்கமளித்துள்ளார். அனுபவங்கள்
என்பது தனி உரிமை.ஒருவரின் அனுபவ விளக்கம் மற்றவர்களுக்குப் பொருந்தவேண்டும் என்ற நிற்பந்தம்இல்லை. குரு நித்தியாவின்
விளக்கம் சிலருக்கு குருவை மிஞ்சிய சிஷ்யராக அவரை அறிமுகப்படுத்துகிறது.
குரு நித்யா இளமை முதலே பரம்பொருளைத்தெரிந்துகொள்ள முயற்சித்தவர். ஆகையினால் நாராயணகுருவைப் படிப்பதற்கு முன்னே நான்
குரு நித்யாவைப் படித்தேன். கோடிக்கணக்கானவர்களில் ஓரிருவர்தான் பிரபஞ்ச இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்,
அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டு தந்த மகான் என்று புகழப்படும் வேதாத்ரி மஹரிஷி விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் இணைக்க முயற்சித்திருக்கிறார்.
அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தனி மனிதர்களின் கருத்துக்கு விடப்படும் கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடை சொல்ல முயற்சிப்பவர்களில் ஓரிருவர் பின்னாளில் மாமனிதர்களாக அறியப்படலாம்.
உயிர் வாழ்வன எல்லாம் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்றின் கூட்டாக செயல்படுகிறது என்பது எல்லா மெய்ஞ்ஞானிகளின் ஒருமித்த
கருத்தாகும். உயிர் வளர்ந்து தானே இறைவன் (ஆன்மா) என்று உணர்ந்துகொள்ளும் நிலையே முக்தி எனப்படுவது.
உயிர் வளர்வதற்கு உடல் தேவைப்படுகிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்பே ஒரு உயிருக்கு மனித உடல் கிடைக்கிறது. மனம் என்பது
எல்லாஉயிரினங்களிலிருந்தாலும் மனிதனில்தான் மனம் செயல்படுகிறது. மனம் சிறப்பாகச்செயல்பட்டால்தான் ஆன்மாவை
அடையாளம் காணமுடியும்.உயிர் வளர்கிறது என்பதை திருமூலரின் இந்தப் பாடல் விளக்குகிறது.
நான் கண்ட வன்னியும் நாலுகலை ஏழும்
தான் கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்தாக
மான் கன்று நிறு வளர்கின்றவாறே.
பிரபஞ்ச இயக்கத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சம் நான்கு மூலங்களின் கூட்டாக உள்ளது என்று முதலில் கருதினர்.
(நியூட்டன்) அவை வெளி, காலம், பருப்பொருள் மற்றும் ஆற்றல். (space,time,matter,and energy)அடுத்து வந்த
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் வெளியும் காலமும் தனித்தனி அல்ல என்றும் அவை ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்றவை
என்றார். அதேபோல் பருப்பொருளும் ஆற்றலும் வெவேறு அல்ல என்பதால் இப்பிரபஞ்சம் இரண்டு மூலப்பொருள்களின் கூட்டுதான்
என்றார்.
இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானி என்று கருதப்படும் வேதாத்ரி மஹரிழி மூலப்பொருள் "சுத்தவெளி" என்ற ஒன்றுதான் என்றும்
அதுவே தன்மாற்றங்கள் பெற்று (manifestation) விரிவடைகிறது என்றும் விளக்கினார்.
நான் கல்லூரி சென்று படித்து பட்டங்கள் பெற்றவன் இல்லைஎன்றாலும் என் மனதில் இப்படிப் படுகிறது என்ற அவரது கோட்பாடுகளை
வேதியியலில் முனைவர் படம் பெற்ற டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்கள் ஒரு சிறந்த கார் மெக்கானிக் குவிந்து கிடக்கும் உதிரி
பாகங்களிலிருந்து ஒரு அற்புதமான ஊர்தியை உருவாக்குவதுபோல் அவரை ஒரு மாபெரும் விஞ்ஞானி என்று உலகுக்கு அறிமுகப்படுத்தும்
முயற்சியில் இருக்கிறார்.
வேதாத்ரி என்ற கற்பகத்தரு உதிர்க்கும் ஞான வாசகங்களிலிருந்து ஒரு ஞான பாடசாலையை "பெருவெளி ஆலயம்" என்ற பெயரில்
பேரளம் என்ற திருவாரூர் மாவட்டத்து கிராமத்தில் நடத்தி வருகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் "ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம். இதையேதான் நாராயணகுரு "'கரு" என்றார்.
கற்பாறையில் சிலையைக் காணும் சிற்பி வேண்டாதவற்றை எல்லாம் உடைத்தெறிகிறான். அது போல் ஆன்மாவை அறிந்துகொள்ள ஏராளமான சுமைகளுடன்
புறப்படும் மனிதன் பயணத்தின்போது தேவையற்றவைகளை எறிந்துவிட வேண்டும். அப்படி அவன் இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலை
வரும்போது உடல்,உயிர்,ஆன்மா மூன்றும் ஒன்றாகிறது.அவன் மீண்டும் பிறவா நிலை பெறுகிறான்.
வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் !
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968