Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 4 ஏப்ரல், 2013

நெற்றி வியர்வை

மனித ஆற்றலின் அளவு என்ன என்ற பேருண்மையை ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்..

நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழைப்பாளி மண்ணிலிருந்து மாணிக்கத்தைக் கண்டெடுக்கிறான். அவன் நெற்றியிலிருந்து உதிர்வது அவனது மனித மாண்பின் வைரத் துளிகள். இராணுவ வாழ்க்கை ஒரு நாட்டின் இரும்புக்கரம் போன்ற அங்கம். இதில் தேர்வு பெற்றமைக்காகப் பெருமைப் படுங்கள். இங்கு பலவீனத்திற்குத் துளியும் இடமில்லை. பயிற்சிக் காலத்தில் மனமும் செயலும் ஒன்றிப் பயிற்சியில் ஈடுபடுங்கள். மனித ஆற்றலின் அளவு என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாத ஒன்று என்ற பேருண்மையை, ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இதை நானா செய்தேன் ? இந்தக் கேள்வி அந்தப் பயிற்சி முடித்து சாதனை கிடைத்ததும் தானே எழும். ஒரு வியப்பும் வரும். அத்துடன் உங்கள் திறமை இவ்வளவுதான் என்று நீங்களே முடிவு கட்டி விடாதீர்கள்.

மனிதர்களின் திறமை கணக்கிலடங்காதது. என்பதுதான் உளவியல் வல்லுனர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை. மனதால் “முடியும்” என்று நம்பக்கூடிய செயலை உடல் சாதித்துக் காட்டுகிறது. வெற்றிபெற வேண்டும் என்ற சிந்தனை - தொடர்ந்தாற்போன்ற சிந்தனை - தீவீர சிந்தனை செயலாக்கத்திற்கு வழி கண்டுபிடிக்கிறது. இன்று முடியாதது போல் தோன்றும் ஒரு வேலை நாளை கட்டாயம் முடியும். இந்த நம்பிக்கையுடன் செயலாற்றும் போது உடலில் புத்துணர்வு தோன்றுகிறது.

புதிய இரத்தம் பாய்ந்தது போன்ற மகிழ்வைத் தூண்டுகிறது. அதனால் நமது செயல் சிறப்பாக அமைகிறது. இன்று நீங்கள் சிந்தும் வியர்வைத் துளிகள் நாளை நாம் சிந்தப் போகிற நமது இரத்தத் துளிகளைக் குறைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968