2. நட்பு என்பது என்ன.
கிராமத்து வாழ்க்கை இயற்கை நடத்தும் பள்ளிக்கூடம் போல் எனக்கு இருந்தது.ஓடும் நீரில் துள்ளி விளையாடும் மீன்களைப் பார்த்துக்கொண்டே
இருந்த நாட்களுமுண்டு.ஆனாலும் அன்பு என்பது என்ன, நட்பு என்பது என்ன, பாசம் என்பது என்ன, கடமை என்பது என்ன போன்ற
எண்ணங்கள் என் சிந்தையை சிதறடித்த நாட்களுமுண்டு.
இரண்டு அண்ணன்கள்,இரண்டு தம்பிகள்,ஒரு அக்காள்,ஒரு தங்கை என்ற பெரிய குடும்பத்தில் என் பெற்றோர் பள்ளிக்கூடம் பார்த்தறியாதவர்கள்.
ஆனால் பிள்ளைகளில் சிலர் கல்வியின் வரம்புகளில் புதிய இலக்கு நிர்ணயித்தவர்கள்.
அண்ணன் தம்பிகளிடையே ஏற்படும் உறவை பாசம்,அன்பு,கடமை என்ற எல்லைக்குள் அடைத்துவிட முடியுமா.இளமைப் பருவத்தில் கடமை
என்பதைத்தவிர வேறு விளக்கம் என்னால் கொள்ள முடியவில்லை.
அன்பின் வழியது உயிர்நிலை அஹ்திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
என்ற குறளை மனப்பாடம் செய்து தேர்வு எழுதியபோது என் உற்றம் சுற்றதிடையே எனக்கு ஏற்ப்படுவது என்ன என்று நான் குழம்பியதுண்டு.
காலமெனும் காட்டாறு கரைபுரண்டோட நான் கல்லுரி வாசலில் நின்றேன்.1957ல் 500க்கு 487 மதிப்பெண் பெற்ற அண்ணனுக்குக் கிடைக்காத கல்லுரி
வாழ்க்கை எனக்குக் கிடைத்தது.புதிய இடம்,புதிய வாழ்க்கை.
இங்கும்கூட நட்பு என்பதை உணரமுடியவில்லை. ஒன்றாக உறங்கி எழுந்து, ஓடிவிளையாடினாலும் கடமை என்பது முன் நின்றதே தவிர
நட்பு அல்லது அன்பு என்பது உணரப்படவில்லை.
இந்நிலையில் முதலாமாண்டு தேர்வு எழுதி முடித்து இரண்டு மாத விடுமுறையில் புறப்படும் நாள்.நானும் எங்கள் பக்கத்துக்கு ஊர்
பையனும் ரயிலில் ஏறப்போகிறோம். உடன் படிக்கும் நண்பன் அருணாச்சலம் காலை முதல் என்கூடவே வருகிறான்.ஏன் இவன் என்கூடவே
வருகிறான் என்று எனக்குப் புரியவில்லை.
ரயிலில் ஏறப்போகும் சமயம் எனது கைக்குட்டையைப் பிடுங்கிக்கொள்கிறான்.எனது அண்ணன் கொடுத்தது அது.இந்த முட்டாள் ஏன்
அதைப் பிடுங்குகிறான்.கொடுடா என்று சண்டை போடுகிறேன்.
உடன் நின்று கொண்டிருந்த பையன் அந்த , அவன் நட்பின் ஆழத்தைப் புறிந்து கொண்டதுபோல் விட்டுவிடு என்று என்னை இழுக்கிறான்
இன்று சுமார் 56 ஆண்டுகள் சென்ற பின்னும் அந்த அருணாச்சலத்தைத் தேடுகிறேன்.அன்று விடுமுறையில் வந்த சில நாட்களில் அவனது கடிதம்
வந்தது.ஆங்கில மீடியத்தில் படித்திருந்த அவனது கடிதம்....
Ganesh ! I love you so much.I want you to become a gentleman of kind heart,good character,and
a hero for the younger generation.It is a pitty that I am not able to express my love and
affection,in different way.I will be watching you from distance.Read the book "of human
bondage"you may understand Provis and Pip.
இனிய நண்ப ! உனது ஆசைப்படியே நான் "Gentleman cadet "என்று அழைக்கப்பட்டு இந்தியத் திருநாட்டின் தென் துருவ
ஆய்வுதளமான "தக்ஷின் கங்கோத்ரியின்"தலைவராக உயர்ந்து உலகிலேயே "Para sailing" என்ற வீர விளையாட்டை உறை
பனி உலகமான அன்டார்க்டிக்காவில் நடத்திய முதல் மனிதன்,அவன் தமிழன் என்று பதிவு செய்துள்ளேன்.நீ எங்கிருந்தாலும் இதை
அறிந்து பெருமைப்படலாம்.
இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ -துன்னருன்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
கண் குத்திற்றேன்று தன் கை.
அருணாச்சலம் என்ற அந்த நண்பனைத் தேடுகிறேன்.
மறுபடி பிறந்தால் அவன் அன்பை உணரும் மனம் வேண்டும் .உயிர்களை அன்பிற்காக பிரதி உபகாரம் தேடாமல் நேசிக்கும் மனம் வேண்டும்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968