` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


ஞாயிறு, 9 அக்டோபர், 2016

Mind is the master

மன மலர் கொய்து மஹேச பூஜை செய்யும் .

எனது பதிவு"இதுவுமல்ல அதுவுமல்ல ,ஓம் "என்ற கட்டுரையை நண்பர்கள் படித்திருக்கலாம். கேரளத்து ஆன்மீக பெருந்தகை "நாராயண குரு " அவரகளின் "ஆத்ம உபதேச சதகம் " என்ற நான்கு வரிகளுக்கொன்றாக நூறு பாடல்களின் நானூறு வரிகளுக்கு அவரது வழித்தோன்றல் குரு "நித்ய சைத்தன்ய யத்தி "சுமார் ஆயிரம் பக்கங்களுக்கு தந்திருக்கும் விளக்கமே "இதுவுமல்ல அதுவுமல்ல ஓம்."என்ற நூல்.
மனித மனம் புற உலகம் ,அக உலகம் என்ற இரண்டுக்குமிடையே போராடுவதே மனித வாழ்க்கை .
புற உலகினைப் புரிந்துகொள்ள உதவும் கண்ணாடி ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி.
இந்த ஐம்பொறிகளும் தெரிவிக்கும் செய்தி அக உலகில் என்ன என்ன வேடிக்கைகளை நடத்துகிறது என்று பார்க்கலாம்.

பெரும் பாலானவர்கள் இந்த ஐம்பொறிகளின் தேவையைப் பூர்த்திசெய்வதுதான் வழக்கை என்று நினைக்கிறார்கள்.
நாள் முழுவதும் பொய், ஏமாற்று, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு மலையில் நவராத்திரி பூஜை செய்கிறார்கள்.
இன்றைய தமிழ் நாட்டின் நிலை ஒரு ஒருங்கிணைந்த கொலைக்களம் போலிருக்கிறது.யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அரசாங்க அதிகாரிகள் தற்கொலை, பள்ளி மாணவன் ஆசிரியரைக்கொலை செய்வது,கணவன் மனைவியை /மனைவி கணவனைக் கொலை செய்வது, கோடிக்கணக்கில் பண மோசடி , நம்பிக்கை துரோகம், கையூட்டுக் கலாச்சாரம் போன்றவைகள்தான் அன்றாட நிகழ்வுகள்.
கொள்ளையடித்தப் பணத்தை நன்றாகப் பூட்டிவிட்டு கோவில் தர்மகர்த்தா என்றமுறையில் கும்பாபிழேகத்திற்க்கு சென்று வந்தால் வீடு திறந்துகிடக்கிறது.(மேலும் விவரிக்கத்தேவையில்லை) இங்குதான் நாராயணகுரு மன மலர் கொய்து மஹேசனுக்குப் பூஜை செய்யுங்கள் என்கிறார்.
மனம் என்ற தோட்டத்தை நாம் பண்டைக்கால விவசாயிகளைப்போல் (?) பராமரிக்க வேண்டும். அந்த மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் என்கிறார். நவராத்திரி, ஆயுதபூஜை என்றால் பூ விலை பல மடங்கு உயர்ந்துவிடும். ஏன் புற உலகப் பூக்களை தேடுகிறீர்கள் .?
அக உலகத் தோட்டம் பாழடைந்தவர்கள் தான் பூக்களைத் தேட வேண்டும் .
எந்த கோவிலுக்கு சென்றாலும் கூட்ட நெரிசல் தாங்கமுடிவதில்லை.திருப்பதி ப்ரமோத்வச விழாவில் சிலர் நேரிடையாக மோட்சத்திற்கு (?) சென்று விட்டார்கள் .

இப்படிப்பட்ட அறிவு சூன்யங்களுக்குகாகவே நமது முன்னோர்கள்
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்,
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்,
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்,
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ! என்று எழுதி வைத்தார்கள்.

நமது கல்வியின் நோக்கம் "கைநிறையப் பொருளீட்டல்" என்றாகிவிட்ட பிறகு மனமாவது மந்திரமாவது.
ஆனாலும் சில நல்லவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தை மீட்டுக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு நல்ல செய்தி. மனமெனும் தோட்டத்தில் விளையும் சந்தன முல்லைகளைக் கொண்டு மனசாட்சி என்ற அந்த மகேசனுக்குப் பூஜை செய்வோம் வாருங்கள்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968