திருமணம் பல விதங்களில் பலரது வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது.இது எப்படி என்ன மாற்றங்களைக் கணேசனது வாழ்க்கையில் கொண்டுவந்தது என்று பார்க்கலாம். எப்படிப்பட்ட மனநிலையில்,எப்படிப்பட்ட சூழ்நிலையில் கணேசன் திருமணத்தை எதிர் நோக்கினார் என்று பார்ப்போம். அவரது அன்னை மறைந்துவிட்டார்.தந்தை கல்வி அறிவற்று விவசாயமே வாழ்க்கை என்றிருந்தார்.மூத்த அண்ணன் சாதாரண வேலை யில் இருந்துகொண்டு ஆறு குழந்தைகளுக்குத் தந்தையாக திணறிக்கொண்டிருந்தார்.கல்வியறிவில்லாத அக்காள் அது போன்ற கணவருடன் போதிய வருமானமில்லாத வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்தார்.அடுத்த அறிவு ஜீவியான அண்ணன் முற்றிலும் தோல்வியான மண வாழ்க்கையில் தன்னைப் பழிவாங்கத்துடிக்கும் அலுவலக அதிகாரிகளுடன் நிம்மதியற்று நாட்களை செலவிட்டுக்கொண்டிருந்தார்.திருமணமான தங்கை யாருடைய அன்புமின்றி கணவரை விட்டால் வேறு கதி இல்லை என்று வாழ்ந்து கொண்டிருந்தார்.திருமணமான தம்பி விவசாயமே கதி என்று முடிவாகிவிட்ட நிலையில் காவிரி தண்ணீர் பிரச்சினையில் தனது வாழ்க்கையும் காய்ந்து போய்விடுமோ என்ற பயத்திலேயே நாட்களை செலவிட்டுக்கொண்டிருந்தான்.கடைசி தம்பி கல்லூரியில் FINAL YEAR B.Sc படித்த்துக்கொண்டிருந்தான். இராணுவப் பொறியியல் கல்லூரியில் கணேசன் படித்துக்கொண்டிருந்த போதிலிருந்தே அவரது திருமண முயற்சிகள் நடந்தன.ஆனால் இடையில் பங்களாதேஷ் போரின் காரணமாக சற்றே பின்னடைவு ஏற்பட்டது. போரின் அறிகுறி ஏற்பட்டு கணேசன் கல்லூரியை விட்டு பு றப்படுமுன் அவருடைய சாமான்கள்,ஒரு மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் எங்கு விட்டுச் செல்வது என்று யோசித்தார்.ஒருவேளை போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வராவிட்டால்.........? திருமணமானவர்கள்அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டிலேயே குடும்பம் இருக்கவும் தனி அதிகாரிகளின் சாமான்களை கல்லூரியே பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கணேசன் தனது சின்ன அண்ணனுக்கு ஒரு விரிவான கடிதம் எழுதி ஒருவேளை தான் போரிலிருந்து திரும்பி வராவிட்டால் என்னென்ன சாமான்கள் எங்கு இருக்கின்றன என்று தெரியப்படுத்தியிருந்தார். அதிர்ஷ்ட்ட வசமாக அவர் திரும்பி வந்துவிட்டார்,சுமார் நான்கு மாத போர்க்கள இடைவெளியில் அவருடைய உற்றார் உறவுகளிடமிருந்து ஒரு கடிதம் கூட வரவில்லை.இது கணேசனை விரக்தியின் விளிம்பில் நிறுத்திவிட்டது.தனது இருப்போ அல்லது இறப்போ குடும்பத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை வருத்தமுடன் புரிந்துகொண்டார். இந்நிலையில் யார் அவருடைய திருமண முயற்சிகளை மேற்கொள்ளுவார்கள்.? சற்று படித்து வெளி உலக அனுபவம் பெற்றிருந்த சின்ன அண்ணன் தான் பார்க்க வேண்டும்.ஆனால் அவரோ திருமணம் ஒரு தேவையற்ற சுமை என்றும் கணேசனும் திருமணம் புரிந்து தன்னைப்போல் தடுமாற வேண்டாம் என்றும் கணேசனுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார். கணேசன் கயிறருந்த காற்றாடியாக திரிந்தார்.ஆனால் மனதில் உறுதியுடன் தனக்கு நிச்சயம் ஒரு நல்ல மண வாழ்க்கை அமையும் என காத்திருந்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராணுவம் என்றால் சிப்பாய் மட்டமும் போரிடுவதுதான் அவர்களது வேலை என்பது மட்டுமே தெரிந்திருந்தது.ஆகையினால் படித்த நல்ல குடும்பத்துப் பெண்கள் இராணுவ அதிகாரியை மணக்க முன்வரவில்லை. கணேசன் ஒரு அதிகாரியின் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சில இடங்களில் பெண் பார்த்தார்கள்.குடியாத்தம் அரசாங்க மருத்துவராக இருந்த பெண் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிச்சயதார்த்தம் செய்ய இருந்தது.அப்பொழுது கணேசன் தனது நண்பர் திருநாவுக்கரசு என்பவரையும் அவரது துணைவியாரையும் அந்த குடியாத்தம் பெண்ணைப் பார்த்து கருத்து கூறும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் அந்த பெண்ணைப் பார்த்து வந்து அவர் கணேசனுக்கு ஏற்றவரில்லை என்று கூறிவிட்டனர்.இதற்கிடையில் தனது திருமணத்தில் முழு மனதுடன் முயற்சி எடுக்கக்கூடியவர்கள் யாருமே இல்லை என்று கணேசன் விரக்த்தியில் அவரது சின்ன அண்ணனுக்கு கடிதம் எழுதினார் . தனது திருமணம் படுதோல்வியடைந்து மன ரீதியில் மிகவும் அடிபட்டுக்கிடக்கும் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு திருமணம் ஒரு சூதாட்டம் போன்றது என்பதால் நீ திருமணத்தைத் தவிர்த்து அதே சமயம் மனம் விரும்பும் பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று பதில் எழுதினர். அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒரே சீரான வாழ்க்கையுமில்லை,எண்ணங்களுமில்லை .கணேசன் ஒரு வித்தியாசமானப் பாதையில் பயணிப்பவர் என்று முன்பே பார்த்தோம்.ஆகையினால் அவர் அண்ணன்களின் கருத்துக்களை ஏற்கவில்லை.பாவ புண்ணியங்களுக்கஞ்சி உண்மையாகவும்,நேர்மையாகவும் நடக்க முயற்சிக்கும் தனக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல் போகும் ? காமத்தின் வடிகால்தான் திருமணம் என்று அவர் நினைக்கவில்லை.ஆணுக்கும் பெண்ணுக்கும் காம வடிகால் தேவைதான்;ஆனால் அதற்காகவே அமையும் திருமணம் வெற்றி பெறாது.ஆகையினால் கணேசன் அவசரப்படவில்லை. கணேசனுக்காகப் பரிதாபப்பட்டு கடைசி முயற்சியாக அவரது சின்ன அண்ணன் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றினார்;யார் யாரையோ சந்த்தித்தார்.அதன் பலனாக சென்னையில் postal RMS Service ல் பணியாற்றும் ஒருவரின் பெண்ணைப்பார்த்தோம் .சுமாரான குடும்பம்.ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய பெண் தான்.ஆனாலும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் குடியாத்தம் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிய நண்பர் திருநாவுக்கரசு கணேசனின் திருமண முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். அதுவரைப் பார்த்திருந்த பெண்களை பற்றிய விபரங்களையும் கேட்டுக்கொண்டார்.P &T COLONY யில் பார்த்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்தார்.இராணுவ அதிகாரியின் வசதி,வாழ்க்கைமுறைகளைக்கொண்டு பார்த்தால் அது சுமாரான இடம்தான் என்று அவரும் புரிந்து கொண்டார்.ஆனால் அந்த பெண்ணைப்ப் பார்க்கவில்லை. இந்நிலையில் கணேசன் பெங்களூரு வந்து ஒரு வருடமாகிவிட்டது.அவரது ரெஜிமென்ட் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போய்விடலாம்.அல்லது கணேசன் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம்.ஆகையினால் திருநாவுக்கரசும் சின்ன அண்ணனும் கணேசன் திருமணத்தில் அவசரம் காட்ட ஆரம்பித்தனர்.1973 ம் ஆண்டு அக்டொபர் மாத சமயத்தில் தீபாவளிக்கு பொருள் வாங்க திருநாவுக்கரசு தேனாம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட் போயிருக்கிறார். சூப்பர் மார்க்கெட் வளாகத்தை சுற்றி வருகையில் அங்கு ஒரு பெண் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார் திருநாவுக்கரசு.அவர் மனதிற்கு மிகவும் பிடித்துப்போய் ,இப்படிப்பட்ட பெண் கணேசனுக்கு துணைவியாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நடந்து வருகையில் அன்று P & T காலனியில் பார்த்த அம்மையார் அங்கு அமர்ந்திருந்ததைப்பார்த்து அவருடன் பேசியிருக்கிறார்.பேச்சு வாக்கில் அவர்களது பெண்ணுக்கு இன்னமும் சரியான இடம் அமையவில்லை என்றும் அதோ நிக்கிறாளே அவள்தான் அவர்களது பெண் என்றும் சற்று முன் திருநாவுக்கரசு பார்த்த அதே பெண்ணை காட்டியிருக்கிறார். அப்படியா,நாங்கள்கூட கணேசனுக்காக இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த சில வினாடிகளுக்குள் பெங்களூரிலிருந்த கணேசனுக்கு போன் செய்து உடனே சென்னை வரச்சொன்னார்.கணேசன் சென்னை வந்தவுடன் திருநாவுக்கரசு,சின்ன அண்ணன் மூவரும் ஏன் அந்த P &T காலனி பெண்ணை முடிவு செய்யக்கூடாது என்பது பற்றி வெகு நேரம் விவாதித்தனர்.கணேசன் மீதும் அவர் இராணுவ பணியில் கொண்டுள்ள ஆர்வத்திலும் நம்பிக்கைக்கொண்ட திருநாவுக்கரசு அந்த பெண்ணை மணமுடிப்பதினால் கணேசனின் வாழ்க்கை நிலை நிச்சயம் நன்றாக இருக்கும் என்று விவாதித்தார்.அவர்களை வேண்டாம் என்று சொல்வதற்கு பொருளாதாரம் மட்டுமே ஒரு காரணம் என்பதாலும் கணேசன் முன்பே பணத்தை ஆற்றில் வீசி ஏறிந்தவர் என்பதனால் அவரைப்பொறுத்தவரை அது ஒரு தடையில்லை என்று முடிவு செய்தார்கள். ஆம்.இப்படித்தான் சில நிகழ்வுகள் நமக்கு வழி காட்டுகின்றன.1974 ம் ஆண்டு தை பூசத்திருநாளில் 06 Feb ,புதன்கிழமை அனந்தலக்ஷ்மி என்ற அந்த கற்பகத்தரு கணேசனின் வாழ்க்கைத்துணைவியானார். காலம் உருண்டோடியது.1975 ம் ஆண்டு முதல் ஆண் குழந்தையும் 1980 ம் ஆண்டு இரண்டாவது ஆண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இன்று இருவருமே வளர்ந்து மணம் முடித்து உயர் அதிகாரிகளா க இருக்கின்றனர் நல்ல மனைவி,நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968