` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 8 நவம்பர், 2017

வாழ்வின் வெற்றி விதியா ? அல்லது மதியின் சாதனையா ?.

மனித வாழ்க்கை ஒரு மகத்தானப் பரிசு.இதன் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள் பல இடங்களில் பல விதங்களில் துன்பமும் துயரமும் அடைந்து அடையாளம் தெரியாமல் மறைந்து போகிறார்கள்.
இதுதான் வழக்கை என்று யார் சொல்லித்தருகிறார்கள் ?
சொல்லித்தெரிந்தகொள்வதும்,பார்த்துப்பார்த்துதெரிந்துகொள்வதும், படித்துத் தெரிந்துகொள்வதுமாக வழக்கை நகர்கிறது.

பெரும்பாலானவர்கள் இதுதான் விதி, தலை எழுத்து என்று வாழ்கிறார்கள். சிலர் வசதியோடு வாழும் மனிதர்களைப் பார்த்து தங்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறார்கள்.
ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடிவு செய்து அதனால் வரும் இன்ப துன்பங்களை ஏற்று வாழ்பவர்கள் ஒரு சிலரே.

தந்தை தசரதனின் கட்டளையை ஏற்று ராமன் காடு செல்கிறான்.
இதனையறிந்த பரதன் அண்ணனிடம் வந்து வீடு திரும்ப கெஞ்சுகிறான்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிதையைப் பாருங்கள்,
நதியின் பிழையன்று நறும்புனலின்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கென் கொல் வெண்டதென்றான்.

இப்படி எல்லோரும் தலைவிதி என்று ஒதுங்கிவிட்டால் தன் சிந்தனை, முயற்சி என்று எதுவும் கிடையாதா?
நானும் ஒரு சித்தன் என்று கவி பாடும் பாரதியின் பாடலைப் பாருங்கள்.
தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங் கூற்றுக்கு இறையெனப் பின் மாயும் -
பல வேடிக்கை மனிதர்களைப்போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
இங்கே விதியைப்பற்றி எள்ளி நகையாடும் பாரதி நான் சரித்திரம் படைப்பேன் என்று சொல்லாமல் சொல்லுகிறானோ ?
" ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் " என்ற விதியின் கோட்பாட்டை தங்களது இயலாமைக்குத் துணையாகக்கொண்டுள்ளவர்கள் "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் "என்ற குறளை அறிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.
சிலப்பதிகாரத்தில் பெரும் பகுதி ஊழ்வினையை வலியுறுத்துகிறது. ஆனால் விஞ்ஞானப் புரட்சி நடந்துகொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் நாம் விதிமேல் பழியைப்போட்டுவிட்டு சோம்பி இருக்கலாமா ?
விடாமுயற்சியும் அறிவின் தேடுதல் விருப்பமும் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வெற்றியைத்தந்திருக்கின்றன.

மனித மூளையின் மகத்தான சக்தி பற்றி கூறும் விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன் போன்ற உலகப்பெரும் விஞ்ஞானிகள் கூட மூளையின் முழு பரிமாணத்தையும் உபயோகிக்கவில்லை என்கிறார்கள். அறிவின் கூர்மையினால் பல அதிசயங்கள் நிகழ்த்தியவர்கள் உண்டு.

1. இறந்த கணவனை மீட்டெடுக்க பிள்ளை வரம் கேட்ட சாவித்திரி.
2.காளிதாசனாக மாறிய காளமேகம்.
3.விறகு வெட்டியின் மகன் வெள்ளை மாளிகையில் .
4.க்ளோனிங் முறை ஆடு மாடுகள்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
"' வரலாறு என்பது மனிதன் தன் எண்ணங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள உழைக்கும் உழைப்பின் தொகுப்பே " என்கிறார் காரல்மார்க்ஸ் .
வரலாறு எதையும் செய்வதில்லை. தானாக அது போராடுவதுமில்லை. ஆனால் வாழும் மனிதன் தான் எல்லாவற்றையும் செய்பவன். அவனே போராடுபவன்.
ஆகவே மனித வள மேம்பாடுதான் ஒரு நாட்டின் சிறப்பான வரலாறாக இருக்க முடியும். தவறான எண்ணங்களுடன் தவறான அணுகுமுறையில் வாழ்வில் பலரும் போராடுகிறார்கள்.
வாழ்க்கை என்பது போராட்டமல்ல.மகிழ்வோடும் மீண்டு மீண்டும் நினைவு கொள்ளத்தக்கனவாகவும் வாழும் வாழ்க்கை முறை. இதைத்தெரிந்துகொள்ள ,பயிற்சி செய்ய வெற்றிபெற நீங்கள் முதலில் உங்களைத்தெறிந்து கொள்ளவேண்டும். உங்களது பிறப்பு, வளர்ப்பு, வளர்ந்த சூழ்நிலை, கல்வியறிவு, நண்பர்கள், உங்களது பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு போன்றவற்றை நீங்களே ஆய்வு செய்யவேண்டும். அந்த ஆய்வுகள் வெறும் எண்ண ஓட்டமாக இல்லாமல் அவற்றை எழுத்தில் கொண்டுவந்து பதிவு செய்யுங்கள், அந்த தன் விளக்கப் பதிவுகளின் அடிப்படையில் உங்களது எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடுங்கள்.

உடலளவிலும் மனதளவிலும் ஊனமில்லாமல் பிறந்த மனிதனுக்கு வாழ்வில் வெற்றி பெற எந்த வித புற காரணங்களும் தடையாக இருக்க முடியாது என்பது உளவியல் கண்ட உண்மை.

வாருங்கள். ! வரலாறு படைப்போம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968