` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 19 ஜூலை, 2018

9.உருவமற்ற குரல் ......
( இரா ணுவப் பொறியியற் கல்லூரி )

இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவிக்கான எல்லா பயிற் சிகளும் நடக்குமிடம் இராணுவப் பொறியியற்கல்லூரி. இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனா என்னுமிடத்தில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிராத இராணுவ அதிகாரிகள் ( BA,B.Sc) இங்கு மூன்றாண்டு கால B. Tech பட்ட ப் படிப்புக்கு வருவார்கள்.இராணுவத்தில் நிரந்திர அதிகாரியானபிறகு கணேசன் இந்த படிப்புக்காக பூனா வந்தடைந்தார்.
அவர் அன்னையின் மறைவு குடும்பத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்பா, 25வயது தம்பி, மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 18 வயது கடைசி தம்பி மட்டுமே ஊரிலிருந்தார்கள்.சமையல் செய்ய யாருமில்லை. இந்நிலையில் மூத்த தம்பிக்கு திருமணம் செய்விக்கவேண்டியது காலத்தின் கட்டாயமானது.
அதன்படி 03 Dec 1970 தம்பி கலியமூர்த்தியின் திருமணம் நடந்தது. கணேசனின் மூன்றாண்டு கால படிப்பு தொடர்ந்தது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இந்திய எல்லைப்புறம் பதட்டமான சூழ்நிலைக்குள்ளானது. அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் போர்க்கால சூழ்நிலையை ஏற்படுத்த இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டனர்.
கணேசன் மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்த 4 Engineer Regiment என்ற படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டார். அந்த படைப்பிரிவு அப்பொழுது திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கருகிலிருந்தார்கள். எந்த நிமிடமும் போர் ஆரம்பமாகலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில் கணேசன் படைப்பிரிவு சென்றடைந்தார்.
ஏராளமான இராணுவத்தினர் கிழக்கு பாகிஸ்தானைச்சுற்றி மூன்று புறத்திலும் இந்திய கடற்படை நான்காவது பக்கமான வங்கக்கடல் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அகதிகளை அவர்கள் நாட்டிற்குள் அனுப்ப போரைத்தவிர வேறு வழியில்லை என்றானபொழுது 03 Dec1971 இந்தியா பன்முக தாக்குதலை ஆரம்பித்தது. போர் ஆரம்பித்த மூன்றாவதுநாள் Bangladesh என்ற புதிய நாட்டை இந்தியா அங்கீகரித்தது.
பன்னாட்டு தலைவர்களும் ஐக்கியநாட்டு சபையும் இந்த போரின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்தனர். போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது வெளி உலகத்திற்குப் புரியவில்லை. ஆனால் இந்திய இராணுவத்தினர் "சேருமிடம் டாக்கா "என்ற குறிக்கோளுடன் அதி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆக பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
பல இடங்களில் பாகிஸ்தானிய இராணுவம் போரிட விரும்பவில்லை.ஆங்காங்கே அவர்களை சுற்றி வளைத்துவிட்டு மற்ற இந்தியப்படைகள் டாக்கா நோக்கி மூன்று புறங்களிலும் முன்னேறிக்கொண்டிருந்தனர்.
கணேசன் இருந்த படைப்பிரிவு புது முயற்சியாக 130 mm Artillery gun ஐ பொறியாளர்களின் கனரக மிதவையில் ஏற்றி மேகனா நதி மூலமாக நரசிங்கிடி என்ற கிராமம் வரை சென்று அங்கிருந்து இயக்கினார். பீரங்கிக் குண்டு டாக்கா விமானதளத்தில் விழுந்தது.
போர் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றுணர்ந்த பாக் இராணுவ தளபதி A A K Niyazi சரணடைய ஒப்புக்கொண்டார்.
16 December 1971 மாலை நான்கு மணியளவில் பாகிஸ்தானின் 93,000 இராணுவத்தினர் இந்தியாவிடம் டாக்கா Race Course மைதானத்தில் சரணடைந்தனர்.
உலகிலேயே நடந்த போர்களில் பங்களாதேஷ் போர் புதிதாக போருக்கு இலக்கணம் வகுத்தது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாலும் ஒரு சரித்தரப் புகழ் பெற்ற போரில் கலந்துகொண்டது பெரு மகிழ்ச்சி என்ற நினைவுடன் கணேசன் இராணுவப்பொறியியல் கல்லூரி திரும்பினார்.
28 june 1973 அவரது மூன்றாண்டு கால படிப்பு முடிந்தது. சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கணேசன் முதல் மாணவராக வெற்றி பெற்றிருந்தார். சிறந்த நீச்சல் வீரர் என்ற பரிசும் பெற்றார். ஆரம்பகால இராணுவப் பயிற்சியின்போது சிறந்த தட கள வீரர் என்ற பரிசும் பெற்றிருந்தார்.
இந்த பெருமையுடன் அவர் 4 Engineer Regiment என்ற அவரது பழைய படைப்பிரிவிற்கே மீண்டும் வந்து சேர்ந்தார்.
பங்களாதேஷ் போர் முடிந்து அவர்களை திரிபுரா மாநிலத்தில் விட்டு வந்திருந்தார். அவர்கள் அங்கிருந்து உடனடியாக மேற்கு பாகிஸ்தான் எல்லைப்புறம் சென்று அங்கு பணி முடிந்து தற்பொழுது பெங்களூரு வந்திருந்தார்கள்.
கணேசன் பெங்களூரு வந்து சேர்ந்தபின் அவரது அண்ணன்கள் அவரது திருமண முயற்சியில் ஆர்வம் கொண்டனர்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968