` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 23 அக்டோபர், 2023

மண்ணும் மனிதர்களும்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது போல் இந்த மனித உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை நாம் அறிவோம்.ஆனால் 96 தத்துவங்களடங்கிய இந்த உடலின் சூக்குமத்தை பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள்வதில்லை. மண்ணின் பெருமையறிந்த விவசாய பெருமக்கள் மனித உடலின் மஹத்துவதில் கவனம் செலுத்துவதில்லை.

கிராமத்தில் விவசாயப் பெருங்குடியில் பிறந்த கணேசன் இயற்கையாகவே அந்த நறுமனச் சகதியில் கிடந்துழலும் பேறு பெற்றிருந்தார்.தமிழிலக்கியங்களின் ஈடுபாடு அவரை புதிய பாதையில் அழைத்துச்சென்றது.



உரிமையில்லாத சொத்து சுகம், உழைக்காமல் பெரும் ஊதியம்,உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் ,நம்பிக்கைத் துரோகம் போன்றவற்றை இளமையிலேயே வெறுத்து ஒதுக்கினார்.பொருளீட்டவேண்டும் என்ற பேராசை அவர் மனதில் பதியவே இல்லை.அதன் காரணமாக தமிழக பொதுப்பணி துறை பொறியாளராக 1961 முதல் இருந்த அவர் வாங்கிய சம்பளத்தை வெட்டாற்றில் வீசியெறிந்துவிட்டு அரசாங்க வேலையை 1963 ல் ராஜினாமா செய்தார்.

இங்கு நாம் திருமந்திரம் பாடல் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும்.
"கண்காணி இல்" என்று கள்ளம் பல செய்வர் ;
கண்காணி இல்லா இடமில்லை ,காணுங்கால் ;
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே .

கணேசனின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கண் காணி அவருக்கு புதிய பாதையைத் திறந்துவிடுகிறான். அவர்களது பரம்பரையிலேயே முன் எப்போதும் யாரும் கனவுகூட கண்டிராத பாதையாக அவர் இந்தியத் திருநாட்டின் இராணுவத்தில் 1964 ம் ஆண்டு மே மாதம் 3 ம் நாள் அதிகாரியாகிறார்.



கல்வியறிவு பெற்று அரசாங்க வேலையிலிருப்போரின் பிள்ளைகள் இளமைமுதல் கனவு கன்டுகொண்டிருக்கும் ராஜ மரியாதை நிரம்பிய இராணுவ அதிகார உயர் பதவியின் முதற் படியிலமர்த்திய அந்தக் கண்காணி மாய உருவில் கணேசனை வழிநடத்த ஆரம்பித்தான்.

இராணுவப் பரம்பரையில் வந்த பல இளம் அதிகாரிகளும் வியந்து நிற்க கணேசன் பழைய எல்லைகளை உடைத்தெறிந்து புதிய இலக்குகளை உருவாக்குகிறார்.

இராணுவத்தில் அதிகாரி களல் லாதோர் முன்னிலையில் அவர் தன்னிகரற்ற தலைவனாக உயறுகிறார்.

சிப்பாய்களின் பயிற்சி அதிகாரி, , இளம் அதிகாரிகளை ப் பயிற்றுவிக்கும் அதிகாரி , படைப்பிரிவு தலைவர் என உயர்ந்த அவரை இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வுதளமான "தக்ஷிண்கங்கோத்ரி "யின் குளிர்கால தலைவனாக இந்திய அரசு தேர்வு செய்தது.



திருவாரூர் மாவட்டம்,சன்னாநல்லூர் மண்ணின் பெருமையை இளமை முதல் அனுபவித்திருந்த கணேசன், தென் துருவம் புறப்படுமுன் சன்னாநல்லூர் வந்து தனது பிறந்தமண்ணில் ஒருபிடி எடுத்து வைத்துக்கொண்டார். 26 நவம்பர்,1987 ல் கோவாவி லிருந்து புறப்பட்ட அவர்கள் 21 டிசம்பர் 1987 ல் அண்டார்க்டிகாவில் இந்திய ஆய்வுத்தளம் சென்றடைந்தார்கள் .தனது பிறந்த மண்ணை ஆய்வுத்தளம் சுற்றி தூவிய பின் தனது பனியை துவக்கினார்கள்.

உலகிலேயே கொடுமையான குளிரும்,பனிக்காற்றும் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் சுற்றுப்புற சூழ்நிலையும் உள்ள அண்டார்க்டிகாவில் இந்திய குழு சரித்திரம் படைத்தார்கள் என்பதை காலம் என்னும் பதிவேட்டில் பதித்த கணேசன் அங்கிருந்து திரும்புமுன் யாருமே எதிர்பார்க்காத ஒரு செயலை செய்தார்.

5000 மீ கணபரிமான உறைபணிக்கிடையில் சுமார் 50 கோடி வருடங்களாக மூழ்கிக் கிடந்த கற்பாறைகள் சிலவற்றை தமிழகம் கொண்டுவந்தார்.அவைகளை சுமார் 10அடி உயர கல்தூணைகளின் மேல் நிறுத்தினார்.

இதுவே "அகத்தூண்டுதல் பூங்கா "பிறந்த கதை.



இந்த நிகழ்வு மண்ணின் பெருமையா , அல்லது மனிதர்களின் பெருமையா ?
மண்ணை நேசிக்கும் மனிதர்களை அந்த பஞ்ச பூதங்களும் பாதுகாக்கின்றன என்பதே இந்த பதிவு தெரிவிக்கும் செய்தி.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968