` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 14 மார்ச், 2022

தனிமைத் தீவினிலே

தனிமை என்பது ஒரு உணர்வு.ஆழ்கடலிலும் தீவுகள் இருப்பதுபோல் கூட்ட நெரிசலிலும் ஒருவன் தனிமையை உணரமுடியும்.ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்துகொள்ள தனிமை அவசியம்.தனிமையிலிருக்கும் ஒருவன் தனது கற்பனைச் சிறகை விரித்து விண்ணில் பறக்கலாம் ,உலகம் முழுவதும் சுற்றி வரலாம்.

மனிதன் சூழ்நிலையின் கைதி இல்லை.சூழ்நிலையின் எஜமானன்.எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக அவனால் மாற்றிக்கொள்ள முடியும்.இராணுவப் பயிற்சியாளனாக மஹாராஷ் ட்ராவின்

காடுமேடுகளில் அலைந்து திரிந்த பொழுது அந்த கரிசல் மண்ணில் வியர்வை சிந்தும் விவசாயிகள் உச்சி வெய்யிலுக்கு மாமரத்து நிழலில் பகலுணவு அருந்துவார்கள்.காய்ந்த சப்பாத்தியும் வெங்காயமும்தான் அவர்களது அறுசுவை அமுதம்.இராணுவப் பயிற்சியாக பகல் இரவெல்லாம் அந்த காட்டுப்பகுதில்தான் நாங்களும் ஓய்வெடுப்போம்.

எனது இளமை நாட்களை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் அவை.உறவுகளைப் பிரிந்து சிறகுகள் விரிந்த அது போன்ற நேரங்களில் தனிமைதான் எனக்குத் துணை.ஆனால் அந்த தனிமை நினைவுகளை எழுத்தில் பதிக்க நான் தவறியதே இல்லை.சுமார் 70 ஆண்டுகால நாட்குறிப்புகள் இன்றும் எனக்கு இளமையோடிருக்க உதவுகிறது.

ஒவ்வொரு முறை விடுமுறை முடிந்து திரும்பும்போது ரயில் பயணத்தில் காவேரி,கிருஷ்ணா,கோதாவரி,நர்மதா மற்றும் கங்கை என்று மா நதிகளைக் கடந்துபோகும்போது எனது சமூகப் பாடங்கள் நினைவிலெழும்.ஏழாவது-எட்டாவது வகுப்புகளில் இந்திய வரைபடத்தைக் கொடுத்து நதிகளின் பெயர்கள்,ஹர்ஷ,குப்த சாம்ராஜ்ய எல்லைகள் குறிக்கவேண்டும்.அப்படிப்பட்ட இடங்களை பின்னொரு காலத்தில் நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

1968-70 களில் இராணுவ படைப்பிரிவை விட்டு கட்டுமானப் பிரிவுக்கு நன் மாற்றப்பட்டேன்.தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை வேண்டாம் என்று வந்த என்னை திரும் பவும் அதுபோன்ற சூழ்நிலைக்கு மாற்றப்பட்டது தலைவிதி.ஆனால் விதியை மதியினால் வெல்லும் திறமை படைத்தவன் மனிதன்.மேகலாயா மாநில தலைநகரான ஷில்லாங் கில் தங்கிக்கொண்டு சுமார் 7கி.மீ தூரத்தில் இந்திய வான்படை தளத்தில் வேலை .பகலுணவு வான்படை அதிகாரிகளுடன் அவர்களது அதிகாரிகளுடைய உணவுக்கூடத்தில் சாப்பிடுவேன்.

எனது அலுவலகம் கட்டுமானப் பணியை மேற்பார்வையிடும் அதிகாரிக்காகவேக் கட்டப்பட்டது.உயர்ந்த மலைப்பகுதியில் உயரமான இடத்தில் மிகவும் விசாலமாகக் கட்டப்பட்டது.மூன்று பக்கங்கள் விரிவான பெரிய பெரிய ஜன்னல்கள்.எனது அலுவலகத்தில் சுற்றிவரும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஒரு சுற்று சுற்றினால் மேகலாயாவின் காசி-ஜெயந்தியா மலைப்பகுதி கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்து பறந்து கிடைக்கும்.எப்பொழுதும் மேகக்கூட்டங்கள் மலையில் படிந்து மெல்ல மெல்ல இங்கும் அங்கும் நகர்ந்து விளையாடும்.அப்படியே மெய்மறந்து அந்த காட்சியை ரசித்துக்கொண்டிருப்பேன்.

அந்த அற்புதமான உணர்வுகளுடன் மாலையில் எனது அறைக்குத்திரும்பி உடைமாற்றிக்கொண்டு ஊசியிலைக் காடுகளுக்கிடையே ஓடும் சாலையில் ஒரு நடை பயிற்சி.அப்பொழுது ரவீந்திரநாத் தாகூரின் "Farewell my Friend " என்ற குறுநாவல் மனதில் ஓடும்.அந்த கதை இளம் காதலர்கள் ஷில்லாங்கில் சந்த்தித்துப் பழகுவதும்,இந்த ஊசியிலைக்காடுகளுக்கிடையே பேசிக்கொண்டே நடப்பது போலவும் கதை ஓடும்.முடிவில் இருவர் மனதிலும் நிறைந்து வழிந்தோடிய அந்த காதல் நிறைவேறாமல் போய்விடும்.உனது நல்வாழ்விற்க்காகவே எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு நான் உன்னைப் பிரிகிறேன் என்று அவள் போய்விடுவாள்.அத்துடன் கதை முடிந்துவிடும்.

அந்த ஊசியிலை மரங்களடர் ந்த சாலையில் நான் நடந்துபோகையில் தாகூரின் அந்த காதலர்களை சந்திக்க முடியுமா ? என்று இங்குமங்கும் தேடுவேன்.

மிகவும் கசப்பான நிகழ்வுகள் நிறைந்த அலுவலக வேலைகளுக்கிடையே எனது மென்மையான உணர்வுகளை இப்படித்தான் காப்பாற்றி வந்திருக்கிறேன்.

இந்த சூழ்நிலையில்தான் நாட்டின் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது, நான் தமிழ் நாட்டு பொதுப்பணித்துறைக்குத் திரும்புவதா? இல்லை இராணுவத்தில் தொடர்வதா? என்று முடிவெடுக்க வேண்டிய தருணம்.இராணுவத்தில் தொடர்வதாக இருந்தால் நான் மீண்டும் ஒரு இராணுவத்தேர்வுக்கு செல்லவேண்டும்.

இராணுவத்தில் தொடர்வது என்று முடிவு செய்தேன்.இந்த முடிவு சன்னாநல்லூர் பாவாடை-தெய்வானை குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற பந்தத்திலிருந்து என்னை இன்னும் சற்று விலக் கிவிடும் என்பதை நான் உணர்ந்தேன் . ஆனால் அது காலத்தின் கட்டாயம் .பின்னாளில் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அன்றைய எனது முடிவு சரியானதே என்பதைத்தான் நிரூபித்தன.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968