Col. Ganesan Satcos-Tamil Web Pages


Interview with Col (Retd.) Ganesan (Tamil)


வணக்கம், நான் கர்னல் P.கனேசன். திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் பிறந்தேன். படித்தது நன்னீலம் தொடக்கப் பள்ளியில். பின்னர், டிப்ளமோ செட்டினாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் படித்தேன். படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தேன். 1962ஆம் வருடம் சீனாவுடனான போர் முடிந்தபோது, இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக (LIEUTENANT) சேர்ந்தேன்.


இந்திய ராணுவம், அண்டார்டிக்கா (தென் துருவ) பகுதியில் “தக்ஷின் கங்கோத்ரி” என்ற பெயரில் ஒரு ஆய்வுதளத்தை அமைத்து உள்ளது. நம்மைப் போன்றே 52 மற்ற நாடுகளும், அங்கு ஆய்வு நடத்துகின்றன. 1987இல் அந்த பகுதிக்கு ஆய்வுக்குழு தலைவராக நம் ராணுவத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சென்றேன். 480 நாட்கள் அங்கு பணிப்புரிந்து திரும்பி வந்தேன். என்னுடன் சேர்ந்து 14 மற்ற ராணுவ ஊழியர்களும் வந்தனர். இந்தியாவின் 5ஆவது குளிர்கால குழு என்று எங்களுக்கு பெயர். அது என் வாழ்வில் ஒரு முக்கியமான அனுபவம்.


தென் துருவம் கொடுமையான, பனி நிறைந்த, குளிர் நிறைந்த கண்டம். அதிசயமான உலகம். அங்கு பணி செய்த, ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியத்தை சந்தித்தேன். அங்கு பனியின் அடர்த்தி (ICE THICKNESS) சுமார் 5000மீட்டர் வரை கீழே படர்ந்திருக்கும். அதற்கு கீழ் தான் மண்ணையே பார்க்க முடியும். சாப்பாட்டில் பால், தயிர், காய்கறி எல்லாம் அந்த 480 நாட்களாக எங்கள் குழு பார்த்ததே இல்லை. இத்தகைய சூழ்நிலையிலும், முழு ராணுவ கட்டுப்பாட்டுடன் மகிழ்ச்சியாகவே அங்கு பணிப்புரிந்தோம்.


ராணுவத்தில் எப்போதுமே, இளமையாகவும், துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். நான் தினமும் 20கிமீ ஓடுவேன், எனது ஜவான்கள் கூட சில சமயம் ஓட மாட்டார்கள், நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.

ஒருமுறை எனது உடலின் முழு திறனை சோதித்துப்பார்க்க, ஒரே நாளில் 20கிமீ ஓட்டம், ஒன்னறை மணி நேரம் கூடைப்பந்து, பின் 5கிமீ நீச்சல் ஆகியவற்றை செய்தேன். இந்த மூன்றையும் தொடர்ந்து 5மாதம் செய்தேன். ராணுவத்தில் நீச்சல், கூடைப்பந்து, தடகளப் போட்டிகள் ஆகியவற்றில் சிறந்த வீரனாக தேர்வு செய்யப்பட்டேன்.

பெங்களூரில் ராணுவ பொறியாளர் படையின் பயிற்சி மையம் உள்ளது (MEG)அங்கு 1000 கணக்கான ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தருகிறார்கள். அந்த பயிற்சி மையத்தில், 3ஆண்டுகள் பயிற்சி அதிகாரியாக பணிப்புரிந்துள்ளேன்.

பின்னர் தென் துருவத்தின் ஆய்வு குழுவிற்கு தலைவர் என்ற வாய்ப்பு வந்தவுடன், என் சொந்த ஊரான சன்னாநல்லூருக்கு சென்று அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து, தென் துருவத்தில் தூவினேன். அதே போல் தென் துருவத்திலிருந்து கிளம்புகையிலும், அங்கிருந்து என்ன எடுத்து வரலாமென யோசித்தபோது, சுமார் 50 கோடி வருடங்கள் உறைபனியாய் கிடந்த 5கல் பாறைகளை நம் ஊருக்கு எடுத்து வந்தேன். அந்த பாறைகள் ஒவ்வொன்றும் 1டன் எடை இருக்கும்.


அந்த 5 கற்களையும் தமிழகத்தில் 5 வெவ்வேறு இடங்களில் வைத்து  (INSPIRATIONAL PARK)  என்று அமைத்துள்ளேன். யாரேனும் இந்த கற்களை பார்க்கும்போது, தென் துருவத்திலிருந்து தெற்கு பசிஃபிக் கடல், தெற்கு அட்லாண்டிக் கடல், இந்திய பெருங்கடல், அரேபியக் கடல் என சுமார் 15000 கிலோமீட்டர் தாண்டி சன்னாநல்லூர் வரை அந்த காலத்திலேயே கொண்டு வர முடியும் என்றால், ஒரு மனிதன் நினைத்தால் எந்த விதமான லட்சியத்தையும், இலக்கையும் அடையலாம் என்ற எண்ணம் வரும். ஏனெனில் எண்ணங்கள் தான் வாழ்வை தீர்மானிக்கிறது.


ஒரு கல்லை பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைத்துள்ளேன். ராணுவத்தில் சேரும் வீரர்கள் அந்த கல்லை பார்க்கையில் ராணுவத்தை பற்றி பெருமையடைய வைக்கும் எண்ணத்தில் அங்கு வைத்தேன்.

இரண்டாவது கல்லை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் என்ற ஊரில், 10ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள வேதாந்த மஹரிஷி ஆசிரமத்தில் வைத்தேன்.

மூன்றாவது கல்லை எனது கிராமமான சன்னாநல்லூரில் வைத்துள்ளேன். கடைசி இரண்டு கற்களை சென்னை அண்ணாநகரில் உள்ள எனது வீட்டில் வைத்துள்ளேன்.


ராணுவம் ஒரு அற்புதமான அமைப்பு. ஆனால் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்ட பின் தான் சேர வேண்டும். சிலர் அங்கு போனபின், அந்த சவால்களை கண்டு தாக்குபிடிக்க முடியாமல் ஓடி விடுவர். பெருமைக்கும் நாட்டிற்கும் பணி செய்ய நினைத்து வருபவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கு பணி செய்வர். அதை மக்களிடன் தெளிவு படுத்தவே, “ராணுவம் அழைக்கிறது” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.
என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும், கட்டாயமாக மூன்று ஆண்டுகளேனும் ராணுவத்தில் பணிப்புரிய வேண்டும். அவ்வாறு செய்தால், நம் நாட்டில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரலாம்.


நான் ராணுவத்தில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே ஒரு போர் 1965 ஆம் ஆண்டு வந்தது. அந்த போரில், பாகிஸ்தான் பகுதிக்குள் வெகு தூரம், எங்களது படை சென்றது. மேற்கு பாகிஸ்தானின் சியால்கோட் பகுதி வரை சென்று தாக்கினோம். அது ஒரு அருமையான அனுபவம்.

இரண்டாவதாக டாக்கா 1971 இன் போர். கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வெற்றிப் பெற்றோம். அந்த போரின் முடிவில் தான், கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது. போர் என்றால், வெற்றியும் வரும், தோல்வியும் வரும். அதிர்ஷ்டவசமாக நான் கலந்துக்கொண்ட இரண்டு போரிலுமே, நான் வெற்றிப் பெற்ற பக்கத்திலிருந்தேன்.


மக்களின் மனதில் இன்றைய காலத்தில் சுயநலம் பெருகி இருப்பது போல் தோன்றுகிறது. மக்களின் மனநிலை மாற வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்த அரசியல் சட்டமும், தலைவர்களும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. தனி மனித மாற்றம் வரவேண்டும். நாட்டுப்பற்று உடைய கல்வியை நாம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் இதெல்லாம் நடக்கும்.


கல்வி நிறுவனங்களில் கற்பதன் நோக்கம் என்ன என்று கேட்டால், மனிதனின் அறியாமையை நீக்க வேண்டும் என்ற பதில் வரும். மனிதன் இயற்கையில் மாபெரும் சக்தி படைத்தவன். ஆனால் அறியாமையால் மூடப்பட்டுள்ளான். அந்த அறியாமையை நீக்கும்போது, தான் ஒரு மகான் என்று அவனுக்கு தெரியவருகிறது. அதனால் மக்களிடம் உள்ள அறியாமையை எவ்வளவு நீக்க முடியுமோ, அவ்வளவு நீக்க பணி செய்வேன்.

அதைத் தவிர, என் சொந்த ஊரில், சொந்த நிலத்தில் வைத்துள்ள “அகத்தூண்டுதல் பூங்கா” சற்று வித்தியாசமானது. அந்த கிராமத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன்.

எனது பெற்றோர்களின் பெயரில் “பாவாடை தெய்வானை” பல்தொழில் பயிலரங்கம் என்ற கூடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். வருடத்திற்கு 4-5 ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை இதன் மூலம் உயர்த்தலாம் என்று நினைத்துள்ளேன். பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமே, நம் கிராம மக்கள் உலகலவில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பது தான். ஒத்த ஆர்வமும் நோக்கமும் உள்ள மற்றவர்களும் சேர்ந்தால் இந்த பணி விரைவில் நடக்கும்.


இந்தியா ஒரு மாபெரும் தேசம். பல நூறு வருடங்களுக்கு முன்பே, பல நாடுகளுக்கு வழிகாட்டிய தேசம். யுவான் சுவாங் சீனாவிலிருந்து, மாத கணக்கில் பயணம் செய்து இந்திய மண்ணை தொட்டு வணங்க வந்தார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் படிக்க வந்துள்ளனர். நம் நாட்டின் பழைய பெருமைகள் அனைத்தையும் இளைஞர்கள் உணர்ந்து, திரும்பவும் பழைய நற்பெயர் உருவாவதற்கு பாடுபட்டால், கண்டிப்பாக நம்மால் உலக அரங்கில் முன்னேற முடியும்.

இரண்டாவது, மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது. முயற்சி செய்கிறவர்கள் தான் வெற்றி பெருகிறார்கள். தாழ்வு மனப்பாண்மை இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதை உணர வேண்டும்.

மனிதனின் செயல்பாடுகளுக்கு புறக்காரணங்கள், வெளியிலிருந்து தடைகள் ஆகியன இருக்க முடியாது. அவை அனைத்துமே, நமது எண்ணத்திலிருந்து தான் உள்ளது. மனதை திடமாகவும், உறுதியாகவும் வைத்து ஒரு காரியத்தை செயல்படுத்தும்போது, உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.