` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 5 ஜனவரி, 2018

உருவமற்ற குரல் .....3

A voice without Form

உதிரப் பிரதேச நேபாள எல்லைப்புறமான பிதோராக்காட்டில் கணேசன் இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.மலைகளற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்திருந்த கணேசனுக்கு இமயத்தின் மடியில் தவழ்ந்து புரள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு திசையில் நடந்து மலையேறுவார்.
இராணுவத்தில் வலுவான உடல்நிலை (Physical Fitness ) என்பது ஒரு வரப்பிரசாதம். மிகவும் சாதாரணமாக ஆரம்பித்த உடற்பயிற்சிகள் காலப்போக்கில் கணேசனை ஒரு சிறப்பான அதிகாரியாக உருவாக்கியது என்றால் அது மிகை இல்லை.
ஒரு முறை எல்லைப்புற ஆய்வுக்காக கணேசன் அனுப்பப்பட்டார். பித்தோராகாட்டிலிருந்து ,தல் ,சாம்.பகேழ்வர் போன்ற இடங்களுக்கு சென்று வர வேண்டியது. சுமார் 3 நாட்கள் பயணமாக அவரும் கூட ஒரு டிரைவர், ஒரு உதவி ஆள் என்று 3 பேர்கள் புறப்பட்டார்கள் .
சாலைகளே இல்லாத காட்டுப்புறத்தில் ஒரு நாள் முழுவதும் கணேசனும் உதவியாளும் நடக்க ஜீப் வேறு வழியாக வந்து இரவு நேரத்தில் அவர்களைக் கண்டுபிடித்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.
இராணுவ வாழ்க்கையில் அதிகாரிகளல்லாதவர்கள் அதிகாரிகளிடம் காட்டும் ராஜ விசுவாசத்தை கணேசனுக்கு அறிமுகப்படுத்த உதவியது இந்த பயணம்.

வாழ்நாள் முழுவதும் என்னிடம் பணியாற்றுபவர்களுக்கு நன்றியுடனும் உதவியாகவும் நான் இருப்பேன் என்ற உறுதியை கணேசன் மனதில் பதித்தது இந்த பயணம்.
1965 பிப்ரவரி மாதம் கணேசன் இரண்டு மாதப் பயிற்சிக்காக பூனா இராணுவப் பொறியியல் கல்லூரி வந்தார். பயிற்சி முடியும் தருவாயில் அவருக்கு இரண்டு மாத விடுமுறையில் செல்ல உத்திரவு வந்தது. கணேசன் மகிழ்ச்சியுடன் சன்னாநல்லூர் வந்து சேர்ந்தார்.
1965 ஏப்ரல் முதல் வாரத்தில் அவர் தனது நண்பர்களை சந்திக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி என்ற ஊர் சென்றார். அன்று இரவு அகில இந்திய வானொலியில், இராணுவத்தினர்கள் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் உடனடியாக தங்களது இராணுவ முகாமுக்குத் திரும்பவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கணேசன் உடனே சன்னாநல்லூர் திரும்பினார். பாகிஸ்தான் அதிரடியாக கட்ச் எல்லைப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனால் போர் உருவாகும் சூழ்நிலை இருப்பதாகவும் சொன்னார்கள்.
கணேசன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.சுமார் 50,000க்கும் அதிகமான முப்படையைச்சேர்ந்த இராணுவத்தினர் அங்கு குழுமியிருந்தனர்.
சென்னையிலிருந்து கல்கத்தா, டெல்கி மற்றும் மும்பை மார்க்கங்களில் தொடர்ந்து மிலிட்டரி ஸ்பெஷல் வண்டிகள் போய்க்கொண்டிருந்தன. கணேசன் டெல்கி மார்க்கமாக ஆக்ரா வந்து பின்னர் அங்கிருந்து அலகாபாத், பிரெய்லி, தனக்பூர் என்று தனது இராணுவ முகாம் வந்து சேர்ந்தார். ஆனால் ஓரிரு ஆட்களைத்தவிர முகாம் காலியாகியிருந்தது.

ஒரு வழியாக தனது அதிகாரியைக்கண்டுபிடித்து அவருடன் மீண்டும் பிரெய்லி வந்தார். 08 மே 1965 அன்று இரவு 02 மணியளவில் பிரெய்லி ரயில்வே சந்திப்பிலிருந்து ஒரு மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி "பாரத் மாதாகீ ஜெய்"என்ற விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன் பஞ்சாப் நோக்கி புறப்பட்டது. கடைசி நேரத்தில் வண்டியிலிருந்து கணேசன் இரங்கி மீதமுள்ள இராணுவத்தினரையும் அழைத்துக்கொண்டு அடுத்த வண்டியில் வர உத்தரவிடப்பட்டார்.

இரவு 02 மணி பிரெய்லி ரயில்வே சந்த்திப்பில் கணேசன் .......

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968