` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 27 அக்டோபர், 2017

மனித வாழ்க்கை ஒற்றையடிப் பாதையல்ல.

வழுத்துதற்கு எளிதாய் வார்கடல் உலகினில் யானை முதல் ஆய் எறும்பு ஈறாய் 84 லட்சம் யோனிபேதங்களுடைய உயிரினங்களில் மனித இனம் மட்டுமே தன்னை அறிவதற்கும் அப்படி அறியமுடியாதவர்களுக்கு அறிவிப்பதற்குரிய ஞானமும் பெற்றிருக்கிறது.
இப்படிப்பட்ட மனித வாழ்க்கை ஒரு ஒற்றையடிப் பாதை போல தான் தன் உற்றம் சுற்றம் என்று ஒடுங்கிவிடலாமா ?

இந்த பரந்த உலகில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளுடனும் பல விதமான சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் மனிதர்கள் பிறந்து வளர்கிறார்கள் .
சமன்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கப்படும் நல்ல விதைகளைப்போல் நற்குடிப்பிறந்தோரும் போற்றி வளர்க்கக்கூடிய பெற்றோர்களைப் பெற்றவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவதில் வியப்பொன்றுமில்லை.
காற்றினில் கலந்து காட்டினுள் விழுந்து விண்ணும் மண்ணுமே வளர்க்கும் சில விதைகள் விரிந்து பறந்து வளர்வதுமட்டுமல்லாமல் தன் நிழலில் ஆயிரம் பறவைகளும் வாழ இடம் தருகின்றன.

மனித வாழ்க்கை அப்படித்தான் இருக்கவேண்டும்.தான் கற்றுக்கொள்வதோடு நிறுவிடாமல் மற்றவர்களுக்கும் கற்பிப்பதும் தான் தெரிந்துகொள்வதோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கும் தெரியச்செய்வதும் இந்த வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
பலவிதமான வசதிகளோடு பிறப்பது ஒரு விபத்து; ஆனால் பலரும் அறிய பெயரோடும் புகழோடும் இறப்பது ஒரு சாதனை என்பார்கள். அதுபோல் சகதியிலும் செந்தாமரை மலரும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
அப்படி நாம் செயலாற்றும்போது நாம் பிறந்து வளர்ந்து செயலா ற்றப் புறப்பட்டுவந்த அந்த ஒற்றையடிப் பாதை ஒரு ராஜ பாட்டையாக,தேரோடும் வீதியாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968