` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 9 ஜனவரி, 2018

உருவமற்ற குரல்..........6

போர் நடந்துகொண்டிருந்ததால் ரயில் எந்தவிதமான வெளிச்சமுமில்லாமல் ஹெட் லைட் இல்லாமல் புறப்பட்டது. இடையில் ஓரிரு இடங்களில் பாகிஸ்தானின் விமானப்படை தாக்குதல்களினால் சற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
ரயில் டெல்லி வந்து சேர்ந்தபொழுதுபகல் சுமார் 10.00 மணியிருக்கும். யாரும் ரயிலிலிருந்து இறங்கவேண்டாம் என்று உத்திரவு இடப்பட்டது.
அன்று காலை அமிரித்சாரிலிருந்தும் பேராஸ்புரிலிருந்தும் போர்க்காயங்களுடன் இரண்டு மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி வந்திருப்பதால் டெல்லி மருத்துவமனைகளில் இடமே இல்லை என்றார்கள். கணேசன் வந்திருந்த மிலிட்டரி ஸ்பெஷல் வண்டியை அப்படியே லக்னோவுக்கு திருப்பிவிட உத்திரவிட்டார்கள் .
சுமார் 3-4 நாட்கள் ரயில் பயணத்திற்குப் பிறகு லக்னோ வந்து சேர்ந்தோம்.ரயில்வே ஸ்டேஷனில் எல்லோருக்கும் மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிரிகளுடன் மோதி பலர் உயிர் தியாகம் செய்திருக்க, ஏராளமானோர் விதம் விதமான படுகாயங்களுடன் பிழை த்திருக்க, இவர்களுடன் விமானதாக்குதலினால் சிறு காயத்துடன் உயிர்பிழைத்த நானும் இருக்க நேர்ந்தது இறைவனது திட்டம் போலும்.

லக்னோ இராணுவ மருத்துவ மனையும் இட நெருக்கடியில் திணற இரண்டுநாளில் அவசிய மருத்துவ உதவி தேவையில்லாதவர்களையெல்லம் உடனடியாக மருத்துவ விடுப்பில் அனுப்ப முடிவானது.
இதில் முதல் ஆளாக கணேசன் பெயர் வந்தது.எந்தவிதமான விசாரிப்புமில்லாமல் தெரு ஓரத்தில் வீழ்ந்து கிடக்கும் அநாதை போல் கிடந்த கணேசனை விடுமுறை முகவரியும் அருகாமையிலுள்ள இராணுவ மருத்துவ மனையும் கேட்டார்கள்.
கணேசன் எங்கு போவார்?. சன்னாநல்லூர் கிராமம். வயல்வெளிகளில் காலைக்கடன்களை முடித்து, வாய்க்கால் குளங்களில் குளித்து வளர்ந்தவர்....காலில் பெரிய கட்டுடன் இருக்கிறார்.
திருமணமான ஒரு அண்ணன் கடலூரிலும் அக்காள் திருச்சியிலுமிருக்கிறார்கள். எங்கு போனாலும் அவர்களுக்கு சுமையாகவே இருக்கவேண்டும்.
தனது படைப்பிரிவு போர்க்களத்தில் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பதான்கோட்டில்தான் அவர்களது கடைப்பகுதி இருக்கவேண்டும். அங்கு கணேசனிடம் மரியாதையுள்ள ஜவான்களிருப்பார்கள், ஆகையினால் கணேசன் பதான்கோட் போக முடிவெடுத்து முகவரி சொன்னார்.
இராணுவ அதிகாரிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகார ரெகார்ட் படி அவர் சென்னை தான் போகவேண்டும் என்று சென்னைக்கு ரயில் வாரண்ட் கொடுத்து அவரை சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள்.
புறநானூற்றின் பாடல்களெல்லாம் படை திரட்டல், போர்க்களம், விழுப்புண், போர்க்களத்திலிருந்து திரும்புதல் போன்ற பாடல்கள் நிறைந்தன .
தென்னகத்தின் பண்டைய வீர வரலாற்றைக்காட்டி நம்மையும் வீரஞ்செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு என்றால் மிகையில்லை. ...
கலிங்கப்போரிலிருந்து திரும்பும் வீரர்களுக்காக கடைதிறப்பு பாடுகிறார் செயங்கொண்டார்.
இப்படிப்பட்ட கற்பனைகளை மனதில் கொண்டு தன்னந் தனியனாக ரயிலின் முதல் வகுப்பு அறையில் பயணித்து சென்னை வந்தடைந்தார். சென்னையில் பயணிகள் உதவியுடன் டாக்சி பிடித்து அவரது சின்ன அண்ணன் பணியாற்றும் அலுவலக வாசலில் நின்று கொண்டு செய்தி அனுப்பினார்.

ஓடி வந்த அண்ணன் ஒற்றை ஆளாக காலில் கட்டுடன் மாசடைந்த மிலிட்டரி யூனிபாரமில் நிற்கும் கணேசனைக்கண்டு மிகவும் மன வேதனைப்பட்டார். ஹோட்டலில் சாப்பிட்டுகொன்டு தனி அறையில் தங்கியிருக்கும் அவரால் கணேசனுக்கு ஏதும் உதவ முடியாதென்று கடலூரிலிருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போக பஸ் டிக்கெட் வாங்கிக்கொடுத்தார்.
கணேசன் கடலூர் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் சன்னாநல்லூரிலிருக்கும் அப்பா, அம்மா கணேசன் போரில் ஒரு காலை இழந்து வந்திருக்கிறான் என்று செய்தி பரவியது.
செப்டம்பர் 17 ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. கணேசனது படைப்பிரிவு என்ன ஆனது என்று ஏதும் செய்தி இல்லை.
இந்நிலையில் மருத்துவ விடுமுறை முடிய கணேசன் சென்னை இராணுவ மருத்துவ மனையில் காலில் கட்டுடன் ரிப்போர்ட் செய்தார்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968