நான் கர்னல் திரு.பா.கணேசன் அவர்களின் தலைமையின் கீழ் இராணுவத்தில் பணியாற்றியவன். அவரது சீரிய சேவை உணர்வு தன் கீழ் பணியாற்றும் அதிகாரியாயினும், எளிய சிப்பாய் ஆயினும் அவர் காட்டிய நிலை மாறாத மரியாதை, அணுகுமுறை ஆகியனவற்றை நே ரடியாகக் கண்டவன். அதனால் பயன் பெற்றவன். ஒரு வகையில் அவர் எனது வழிகாட்டி. இராணுவப் பணி என்பது மற்ற அரசாங்க உத்தியோகம் போல் தான் என்று மிக சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவப் பணி என்பது சேவையே. அப்படி சேவை புரியத் தேர்வாகி, அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு படைப் பிரிவில் சேர்ந்த பிறகு உடலளவில் நோய் நொடிகளற்றும் பலசாலியாகவும் தன்னை வைத்துக் கொள்வது மிக முக்கியம். கூடவே பணி சார்ந்த வேலைகளில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்வதும் இராணுவத்தினர்களின் கடமையாகிறது. ஒரு அதிகாரியோ அல்லது படைப்பிரிவு தலைவனோ சொல்லித்தான் தனது உடல் நலத்தையோ அல்லது பணித்திறமையையோ வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
“எல்லைப்புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” என்ற இவரது முதல் நூல் இராணுவ அதிகாரியான கர்னல் பாவாடை கணேசனது ஆரம்பகால இராணுவ வாழ்கை பற்றியது. பெற்றோர்களுடன் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று பெரிய குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து வளர்ந்த கணேசன் யாருமே எதிர்பாராமல், முன்னர் எக்காலத்திலும் அறிமுகமில்லாத விதத்தில் இராணுவ அதிகாரியானார். ஆரம்பகால இராணுவ வாழ்க்கையில் குடும்பத்துடனான பாசப்பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விடுபடவும் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட இராணுவ வாழ்க்கையில் அதிக ஈடுபாடுள்ளவும் வைத்த காலமது. அந்த முதற்பகுதி 30 கடிதங்களடங்கியது. இராணுவ அதிகாரியாகத் தேர்வானது முதல் 1971-ல் நடந்த இந்திய - பாகிஸ்தானிய போர் அதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி “பங்களாதேஷ்” என்ற தனி நாடாகியது என்பதுடன் முடிகிறது.
இந்த இரண்டாம் பகுதி “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற பெயருடன் அவரது அடுத்த கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்து விட்டிருந்தன. ஒரே ஒரு தம்பியைத் தவிர மற்ற எல்லோருக்கும் திருமணமாகி இருந்தது. ஆகையினால், இந்த இரண்டாம் பகுதி “கடிதம்” போன்ற வடிவில் இல்லாமல் திரு.கணேசனது எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைத் தொகுப்பாக இருக்கும். அனுபவ முதிர்ச்சியும் காலத்தின் மாற்றங்களும் ஏற்படுத்தி இருக்கும் வித்தியாசமான மனநிலை கொண்டவராக இப்பகுதியில் அறிமுகமாகிறார் கர்னல் பாவாடை கணேசன்.
இன்றைய இளைஞர்கள் தங்களது மனவலிமையை உணராமல் இல்லாமை, இயலாமை என்று தங்களுக்குள்ளேயே ஒரு இழிநிலையை ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள். “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற தலைப்பிலான இந்த அனுபவக் கட்டுரைகள் திசைமாறி போகும் இளைஞர்களை சரியான பாதைக்குத் திருப்ப உதவும். வாழ்வின் முன்னேற்ற இலக்குகளை எளிதாக அடையாளம் காணவும் அவைகளை அடையவும் உதவும். குறிப்பாக இராணுவத்தினர்க்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் நலமுடன் நீடூழி வாழ்ந்து நாட்டிற்கும் அவர் பணியாற்றிய இராணுவத்திற்கும் மேலும் சிறப்பான தொண்டு புரிய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.